”SIR உருவாக்கிய மும்முனை போட்டியால், தவெக வெற்றி” : எதிர்க்கட்சிகளை ஒடுக்க கூட்டுச் சதி : திருமா பேட்டி..!

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவதற்கு காரணமே SIR தான் என்று, திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
Thirumavalavan alleged 'SIR' is very reason for TVK victory in the Tamil Nadu Assembly elections
Thirumavalavan alleged 'SIR' is very reason for TVK victory in the Tamil Nadu Assembly electionsthirumavalavan twitter
1 min read

விரைவில் வெகுஜன புரட்சி

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற இண்டியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ” எங்களின் போராட்டம் வெகுஜன புரட்சியாக மாறும்.

அனைவரும் எதிர்க்கிறார்கள்

எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்க்கவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர், பாஜக, ஆர்எஸ்எஸ் சதித் திட்டத்திற்கு துணைபோன செயலை கடுமையாக கண்டிக்கிறார்கள், எச்சரிக்கிறார்கள்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்த அறப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில்தான் எம்பிக்களின் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகளை ஒடுக்க சதி

குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் போன்ற தேசிய கட்சிகள் இங்கே இருக்கக் கூடாது. ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற முறையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர்கள் செயல்திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஞானேஷ்குமார் முழு ஒத்துழைப்பு

இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முழுமையான ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார். அவர் செய்திருப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, தேச விரோதமாகும்.

தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக

அவரை அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பாஜகவுக்கு எதிரான வாக்கு வங்கி நீக்கம்

கடந்த காலங்களிலேயே SIR என்கிற நடைமுறை இருந்திருக்கிறது. நாம் அதை மறுக்க முடியாது. இப்போது அதை நடைமுறைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பாஜகவுக்கு எதிரான வாக்கு வங்கிகளை மதரீதியாகவும், சாதிரீதியாகவும் அடையாளம் கண்டு, அவற்றை கொத்துக் கொத்தாக நீக்கியிருக்கிறார்கள்.

பாஜக வெற்றி பெற வழி வகுப்பு

சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளையும், தலித் மக்களின் வாக்குகளையும், எங்கெல்லாம் பாஜக வெற்றி பெற முடியாதோ அந்த இடங்களிலெல்லாம் நீக்கியிருக்கிறார்கள். பாஜக வெற்றி பெறுவதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.

பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தோற்கடிக்கப்பட்டார்கள் குறிவைத்து, திட்டமிட்டு பல எதிர்க்கட்சித் தலைவர்களை இவர்கள் தோற்கடிக்கிற வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மும்முனை போட்டி

தமிழகத்தில் இருமுனைப்போட்டி இருந்த நிலையில், SIR மும்முனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது. இல்லையென்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமுனைப் போட்டியாகத்தான் இருந்திருக்கும்.

தவெக வெற்றி

மும்முனைப் போட்டியை உருவாக்குவதற்கு SIR பயன்படுத்தியிருக்கிறது. அதனால்தான் இந்த தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

பல மாநிலங்களில் இந்த நிலை இருப்பதால், தமிழ்நாட்டிலும் இது இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவு வந்த காலத்தில் நான் சொல்லியிருக்கிறேன். அந்த கருத்து இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு திருமாவளவன் பேட்டியளித்தார்.

==================i

logo
Thamizh Alai
www.thamizhalai.in