

விரைவில் தேர்தல் - ஸ்டாலின் கருத்து
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களிடையே சில தினங்களுக்கு முன்னால் பேசிய மு.க. ஸ்டாலின் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
தவெக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் புகைச்சலை கிளப்பியது.
வாக்குறுதியை காப்பாற்றுவோம்
இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தவெகவுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்டாயம் காப்பாற்றும்.
உறுதியாக நிற்கும் காங்கிரஸ்
காங்கிரசை பொறுத்தவரையில், எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக, அந்த அணிக்கு ஆதரவு மட்டும் நல்காமல், கூட்டணியில் இணைகிறோம்.
உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வரையில் என்னென்ன தேவைகள் என்பன குறித்து அறிவித்துவிட்டு, அவர்கள் அந்த கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள்.
5 ஆண்டுகள் தவெக ஆட்சிதான்
இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்குகிறார்கள். 5 ஆண்டுகள் வரையில் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே இடதுசாரிகளின் விருப்பம் என்பதை திரும்பத் திரும்ப அவர்கள் உறுதிப்படுத்தி வருகிறார்கள்.
விசிக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
அதே நிலைப்பாட்டைதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்று நம்புகிறேன்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளுடைய கூட்டம் நாளை ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது. அதில் விசிக பங்கேற்கிறது.
புதிய கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா? என்பது ஆலோசனைக்கு பிறகே தெரிய வரும்.
ஆதரவு கட்சி தலைவர்களை மட்டுமன்றி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். விசிகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறோம்.
தலைவர் என்கிற முறையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையிலும் நானும் அதிலே பங்கேற்கிறேன். ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவரும் பங்கேற்பார்.
அதேபோல வன்னியரசு, ஜோதிமணி ஆகிய நால்வரும் பங்கேற்போம். கூடுதலாக, பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அவர்களும் அதிலே பங்கேற்க உள்ளார்.
அதிமுக தான் சொல்ல வேண்டும்
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது பற்றி ராஜினாமா செய்கிறவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ”அதிமுகவுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்காக நீங்க வந்து பதவி விலகுறீங்க?” என அவர்களிடம் கேட்க வேண்டும்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்க முடியாது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதிமுகவுக்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன? என்பதைத்தான் நீங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை பதவி விலகியிருக்கிறார்கள் இது அதிமுகவுக்குள் எழுகிற மிக முக்கியமான ஒரு பிரச்சனை. ரொம்ப சீரியஸா விவாதிக்க வேண்டிய ஒன்று.
எனவே, இந்த கேள்விகளை நீங்கள் அதிமுகவினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும் “ என்று திருமாவளவன் கூறினார்.
==========