
புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில், அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு நடைபெறும் விழாக்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
திருச்செந்தூர் திருவிழாக் கோலம் :
ஆண்டு முழுவதும் இந்தக் கோயிலில் விழாக்கள் நடத்தவாறே இருக்கும். சூரசம்ஹாரம், கந்த சஷ்டி விழா, வைகாசித் திருவிழா போன்ற விழாக்களின் போது கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக 300 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
10 லட்சம் முருக பக்தர்கள் :
யாகசாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
சுமார் 10 லட்சம் பேர் குடமுழுக்கு விழாவை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர. ஆயிரக் கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவில் நிர்வாகம், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. குடமுழுக்கு நாளில் கோபுரத்தில் நடைபெறும் நிகழ்வை நேரடியாகக் காண, திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் 50,000 பக்தர்கள் நிற்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் :
கோயிலுக்கு வருவோருக்கு தண்ணீர், உணவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. கடலில் குளிக்கும் போது பக்தர்கள் அலையில் சிக்கிக் கொண்டால், அவர்களை மீட்க நீச்சல் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவித சிக்கலும் இன்றி குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
=====