
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலாகும். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது.
2,000 ஆண்டுகள் பழமையான கோவில் :
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. குன்றுதோறாடும் முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளன.
சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை வழிபடுகிறார். தனிச்சிறப்பு வாய்ந்த இந்த தலத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் விழாக்கள் :
மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். குறிப்பாக வைகாசி மாதம் விசாக திருவிழா, ஆவணியில் ஆவணித் திருவிழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழா, தை மாதத்தில் தைப்பூச திருவிழா, மாசியில் மாசித் திருவிழா ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும் திகழ்கிறது.
7ம் தேதி குடமுழுக்கு விழா :
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
விமான கலசங்களில் தங்கத்தகடுகள் :
கோவிலில் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் விமான கலசங்களில் தங்கத்தகடு பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்நிலையில் குடமுழுக்கு விழா, நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் நடக்க உள்ளது.
ராஜ கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்படும். அப்போது மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
10 லட்சம் பக்தர்கள், விரிவான ஏற்பாடு :
சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
====