TN Budget 2026: குட்டிக்கதை, எம்.ஜி.ஆர் வசனம், தத்துவப் பாடலுடன் பேரவையை அசத்திய நிதியமைச்சர் மரிய வில்சன்!

2026-27 தமிழக பட்ஜெட் பதிலுரையில் குட்டிக்கதை, எம்.ஜி.ஆர் சினிமா வசனம் மற்றும் பாடலைப் பாடிய நிதியமைச்சர் மரிய வில்சன்.
 Finance Minister Maria Wilson dazzled the Assembly with a short story, an MGR dialogue, and a philosophical song
Finance Minister Maria Wilson dazzled the Assembly with a short story, an MGR dialogue, and a philosophical songgoogle
1 min read

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான பொது விவாதம் சுவாரசியமான நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் விவாதங்களுக்குப் பதிலளித்து நிதியமைச்சர் மரிய வில்சன் சுவாரசியமான உரையாற்றினார்.

பட்ஜெட் உரையை தாக்கல் செய்தாலும் இதுதான் ’கன்னி உரை’

பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்து பேசினாலும், சட்டப்பேரவையில் தமக்கான அதிகாரப்பூர்வ 'கன்னி உரை' இதுவே எனக் குறிப்பிட்ட அமைச்சர், அரசியல் கருத்துகளை குட்டிக்கதை, திரையுலக வசனங்கள் மற்றும் தத்துவப் பாடல்கள் வாயிலாக நயம்பட எடுத்துரைத்தார்.

'நேர்மைக்கு தான் வெற்றி' பேரவையை ஈர்த்த குட்டிக்கதை

தனது பதிலுரையின் தொடக்கமாக ஒரு சுவாரசியமான குட்டிக்கதையை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்:

"ஒரு நாட்டின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பெரியவர் ஒருவர் போட்டி ஒன்றை அறிவித்தார். நாட்டின் இளைஞர்களை அழைத்து ஆளுக்கு ஒரு விதையைக் கொடுத்து, அதை 3 மாதங்கள் வளர்த்து பூக்களாக மலர்ந்த பின் எடுத்து வருமாறு கூறினார்.

3 மாதங்கள் கழித்து அனைவரும் பூத்துக் குலுங்கும் அழகிய செடிகளுடன் வந்திருந்தனர். ஆனால், ஒரே ஒரு இளைஞன் மட்டும் எந்தச் செடியும் முளைக்காத வெறுமையான பானையுடன் வந்து நின்றான். மற்றவர்கள் அவனைக் கண்டு எள்ளி நகையாடினர்.

ஆனால், அந்தப் பெரியவரோ அந்த இளைஞனே வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஏனெனில், அவர் கொடுத்தது வேகவைக்கப்பட்ட விதைகள், அவை ஒருபோதும் முளைக்காது. மற்றவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி வேறு விதைகளை நட்டு ஏமாற்றினர். ஆனால், அந்த இளைஞன் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டான்".

இந்த கதையை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறுக்கு வழியில் செல்லாமல் நேர்மையின் வழியில் நின்று சாதிக்க முடியும் என்பதற்கு நமது முதலமைச்சர் விஜய்யே சிறந்த சாட்சி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆரின் வசனமும், தத்துவப் பாடலும்

தொடர்ந்து தனது உரையில் திரையுலக நினைவுகளைப் பகிர்ந்த அமைச்சர் மரிய வில்சன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 'மர்மயோகி' திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தை மேற்கோள் காட்டினார்.

"குறிவைத்தால் தவறமாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்!"

இந்த வசனத்தை சுட்டிக்காட்டிய அவர், சொன்னதை சாதித்துக் காட்டும் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் விளங்குவதாகப் புகழாரம் சூட்டினார்.

அத்துடன் நிறுத்திவிடாமல், எம்.ஜி.ஆரின் காலத்தால் அழியாத தத்துவப் பாடலையும் பேரவையில் பாடிக் காட்டினார்.

"கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்..

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்..

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்..

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்.."

இந்த வரிகளைக் குறிப்பிட்டு பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், அன்றே எழுதப்பட்ட இந்த வரிகள் இன்றைய நமது தலைவரின் பண்புகளுக்கு அப்படியே பொருந்துகிறது என்று சுட்டிக்காட்டி, பட்ஜெட் விவாத பதிலுரையை நிறைவு செய்தார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in