

தமிழக சட்டமன்ற தேர்தல்
Tamil Nadu Assembly Election 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்து இருக்கின்றன.
மார்ச் 5ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்து விட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், தொகுதி பங்கீடும் அடுத்த வாரம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரத்தில் பங்கு - காங்கிரஸ்
அதிகாரத்தில் பங்கு என்று குரல் கொடுத்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் சற்று அசைத்து தான் பார்த்தது. கூடுதல் இடங்களும் தலைவலியாக மாறின. விஜய் வருகை தான் காங்கிரசின் இந்த வீறாப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.
திமுக - காங்கிரஸ் பேச்சு
அனைத்து யூகங்களையும் தாண்டி, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இன்று முறைப்பட்டி பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமூகமான பேச்சுவார்த்தை, வேண்டியதை கேட்டோம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் செல்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம்.
ஒரு ராஜ்யசபா சீட் உறுதி
அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார். எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான, இயற்கையான, உறுதியான, மதவாதத்துக்கு எதிரான கூட்டணி.
கூட்டணியை சிதைக்க முயல வேண்டாம்
இதனை சிதைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். எங்கள் கூட்டணி தமிழ் மண்ணை காக்கும் கூட்டணி. ஒருபோதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை.
தவெகவுடன் பேச்சு இல்லை
தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவில்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வதந்தி.
கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தை, அவர் சொன்னதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் உயர் தலைமை திமுகவுடன் கூட்டணி நடத்தவே கூறியுள்ளது” என்று செல்வப் பெருந்தகை கூறினார்.
பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “ திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், நம்பிக்கையுடனும் நடக்கிறது. எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து கேட்டுள்ளோம்.
அதிக தொகுதிகளை கேட்டோம்
எங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். கடந்த முறையை விட அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் திமுக குழுவிடம் பேசியுள்ளோம். இதுகுறித்து இரு நாட்களில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
===========