

TN Govt Bank Account Cyber Fraud Rs 22 Crore
புதுச்சேரி அரசு வங்கிக் கணக்கில் ரூ. 8.85 கோடி மாயமானது
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியின் 260 ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்க கருவூலம் மூலம் ரூ. 8.16 கோடி விடுவிக்கப்பட்டு கல்லூரியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ஆனால், கருவூலத்திலிருந்து பணம் வந்த 2 மணி நேரத்திற்குள், கணக்கில் இருந்த ரூ. 8.85 கோடி டிஜிட்டல் முறையில் திருடடப்பட்டது.
அம்மாநில சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் செயல்பட்டது தெரியவந்து, அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசுக் கணக்கில் ரூ. 22.10 கோடி மோசடி
புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்தும் ரூ. 22.10 கோடி டிஜிட்டல் முறையில் ஹேக் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்ட நிதி விவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம்: ரூ. 14 கோடி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்: ரூ. 5 கோடி
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம்: ரூ. 3.10 கோடி
சுகாதார நல மையத் திட்ட நிதி பாதிப்பு
இந்த நிதி, 15-வது நிதிக்கழு மானியத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் தலா ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நல மையக் கட்டிடங்கள் அமைக்கும் திட்டத்துடன் தொடர்புடையது.
இத்திட்ட நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறையில் மாநில அளவிலான ஒற்றை மைய வங்கிக் கணக்கு (Single Nodal Account) சென்னையில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கும் நடைமுறை உள்ள சூழலில், இந்த இணையக் கணக்கில் ஊடுருவி நிதி முறைகேடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நைஜீரிய கும்பல் மீது சந்தேகம் - சைபர் கிரைம் விசாரணை
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்த பிரம்மாண்ட டிஜிட்டல் நிதி திருட்டு சம்பவங்களின் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த சர்வதேச சைபர் கிரைம் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
=========