”வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல செக்” : தமிழக அரசு அதிரடி : சுரங்கத்துறை இயக்குநருக்கு முழு அதிகாரம்...!

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கும் வகையில், தமிழக அரசு அதிரடி சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
TN govt introduced bold legislative amendment to ban transportation of minerals to other states
TN govt introduced bold legislative amendment to ban transportation of minerals to other statesAI generated
2 min read

ஜல்லி, எம். சாண்ட்

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம். சாண்ட் ஆகியவை எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன. இவைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால், தமிழகத்தின் வளம் சுரண்டப்படுவதோடு, இங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

எனவே, போதுமான அளவில் எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை அதிகரிப்பு

கடந்த சில வாரங்களாக ஜல்லி, கருங்கல், எம்.சாண்ட், பி. சாண்ட் உள்ளிட்ட அத்தியாவசியமான கட்டுமானப் பொருட்களின் விலை தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதிப்பு

இது கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், வீடு கட்டும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கட்டுமானப் பணிகளுக்கு முக்கிய மூலப் பொருட்களாக விளங்கும் ஜல்லி, மணல் மாற்றுப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு சராசரியாக 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

விலை கடுமையாக அதிகரிப்பு

ஒரு யூனிட் ஜல்லி 4,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், எம்.சாண்ட் 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாகவும், பி.சாண்ட் 6,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டை தாண்டும் விலையேற்றம்

இப்படி அனைத்து விதமான கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களும் அதிரடியாக விலை உயர்ந்து உள்ளதால் வீடுகளின் ஒட்டுமொத்த கட்டுமான செலவும் திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைத் தாண்டி உயர்ந்துள்ளது.

நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்பு

ஆயுள் கால சேமிப்பை முதலீடு செய்தும், வங்கிக் கடனை நம்பியும் சொந்த வீடு கட்டத் தொடங்கிய நடுத்தர மக்கள் இந்த மூலப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்த அதிரடியான விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கட்டுமானத் தொழில் முடக்கத்தை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கடத்தலை தடுக்க நடவடிக்கை

அதன் அடிப்படையில் சட்ட விரோதமாக கனிம வளங்களை மற்ற மாநிலங்களுக்கு கடத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை, தடுப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம்

தமிழ்நாடு மாநிலத்தில் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவற்றை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதை தற்காலிகமாக தடை செய்ய சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனருக்கு தமிழக அரசு முழு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடத்தல் தடுக்கப்படும்

கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், கட்டுமானத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் கனிமங்கள் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத் தேவைக்கு முக்கியத்துவம்

மாநிலத்தின் உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எம். சாண்ட் வெளிமாநிலங்களுக்குச் செல்வதை கண்காணிக்கவும், தேவைப்படும்போது தற்காலிகத் தடை விதிக்கவும் இந்த இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேரளா, கர்நாடகாவுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடுத்து, தமிழ்நாட்டில் போதுமான அளவில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநிலத்தின் கனிம வளங்களை பாதுகாக்கவும், உள்நாட்டு கட்டுமானப் பணிகளுக்கு தங்கு தடையின்றி கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி சட்ட திருத்தம் பயனுள்ளதாக இருக்கும் என்று, போதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in