

TN Govt School Education Dept Free Shoes Sweater Raincoat Tender
மலைப்பகுதி மாணவர்களுக்குப் பிரத்யேக ரெயின்கோட்
தமிழ்நாடு அரசு சார்பில் மலைப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா ரெயின்கோட் வழங்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
2027-2028 கல்வி ஆண்டிற்கான 4 முக்கிய டெண்டர்கள்
முதல்வர் விஜய் தலைமயிலான தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், 2027-2028 கல்வி ஆண்டிற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை இணைப் பொருட்களுக்கு ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ. 52 கோடி மதிப்பிலான இந்த டெண்டர்கள் மூலம் காலணி, காலுறை, கம்பளி ஸ்வெட்டர் மற்றும் ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
விலையில்லா காலணி (Shoes)
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலணி வழங்குவதற்கு ரூ. 37 கோடியே 24 லட்சம் மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
காலுறைகள் (Socks)
மாணவர்களுக்கான காலணிகளுடன் வழங்கப்படும் காலுறைகளைக் கொள்முதல் செய்ய ரூ. 9 கோடியே 7 லட்சம் மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மலைப்பகுதி மாணவர்களுக்கு ரெயின்கோட்
மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்கள் மழைக்காலத்தில் சிரமமின்றி பள்ளிக்கு வருவதற்காக ரூ. 3 கோடியே 32 லட்சம் மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 91,771 செர்ரி சிவப்பு (Cherry Red) நிற ரெயின்கோட்கள் (28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவுகளில்) கொள்முதல் செய்யப்பட உள்ளன.
பயன்பெறும் மாவட்டங்கள்
கோவை, நீலகிரி, திண்டுக்கல் (கொடைக்கானல்), தர்மபுரி, ஈரோடு, சேலம் (ஏற்காடு), கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல் (கொல்லிமலை), தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர் (வால்பாறை), திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப் பகுதிப் பள்ளிகள் இதில் அடங்கும்.
கம்பளி ஸ்வெட்டர்
குளிர் அதிகம் உள்ள மலைப் பகுதி மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர் வழங்க ரூ. 2 கோடியே 42 லட்சம் மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர் நலன் சார்ந்த அடுத்தடுத்த திட்டங்கள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்தத் தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய தரமான நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர்ர் விஜய் கையொப்பமிட்ட வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஸ்வெட்டர் மற்றும் ரெயின்கோட் வழங்குவதற்கான டெண்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு
முன்னதாக மலைப்பகுதியில் வசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ரெயின்கோட், கம்பளி ஸ்வெட்டர் மற்றும் பூட்ஸ் வழங்கும் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து ஒவ்வொரு கல்வியாண்டும் மலைப்பகுதி மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக இவை கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் 2027-2028 கல்வியாண்டிற்கான முன்கூட்டிய கொள்முதல் பணிகளுக்காகவே தற்போது ரூ. 52.05 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
========