

TN Govt Tasmac Shops Closure Festival Days Law Order
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட ஆலோசனை
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை குறைக்கும் நோக்கில், பண்டிகை நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி பண்டிகை அன்றும் அதனையொட்டி நடந்த பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் மதுபோதையில் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்த முக்கிய முடிவை நோக்கி அரசு நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தீபாவளியன்று நடந்த கொலைச் சம்பவங்கள்
தீபாவளி பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைச் சம்பவங்கள் நடந்தது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல்துறை தரப்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
இதனிடையே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் கார்த்திக், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விரைவில் முக்கிய அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பண்டிகை நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
======