
தலைமை ஆசிரியர் இல்லா பள்ளிகள் :
Promotion Rules for Tamil Nadu Government Schools : ஏழை, எளிய குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பயில்கிறார்கள். அவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு, குடிநீர் வசதிகள், கட்டிட வசதிகள், கழிப்பறை வசதிகள், கணிப்பொறி வசதிகள், ஆய்வக வசதிகள் என அனைத்தும் இருந்தாலும், தலைமை ஆசிரியர்(Head Master) இல்லை என்றால் யார் பள்ளியை சரியாக நிர்வாகம் செய்வது என்ற பிரச்சனை மற்றும் சவால், 4 கல்வி ஆண்டுகளாக கல்வித் துறையில் நீடித்து வருகிறது.
தலைமை ஆசிரியர் அவசியம் :
குடும்பத்திற்கு குடும்ப தலைவர், மாவட்டத்திற்கு ஆட்சியர், பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர், மாநிலத்திற்கு முதலமைச்சர், நாட்டிற்கு பிரதமர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் என்பது மறுக்க முடியாத உண்மை.
திமுக ஆட்சியில் பதவி உயர்வு இல்லை :
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நான்கு கல்வி ஆண்டுகளாக, பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில்,1 முதல் வகுப்பு 10 வரை ஆசிரியர்களாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஒருவருக்கு கூட தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு :
அதற்கு முக்கிய காரணம் RTE ACT 2009ன் படி பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. பதவி உயர்வுக்கு, பணியில் தொடரவும் TET கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் 2022ல் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகு, TET கட்டாயமாக இருந்த போதிலும், பணியில் தொடர TET தேவை என்பதிலிருந்து ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் விலக்கு. அதே சமயம் பதவி உயர்வினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்ல TET-ல் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று இரு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு :
ஆசிரியர் சங்கங்களின் தொடர் அழுத்தம் காரணமாக மற்றும் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இது தொடர்பாக நாடு தழுவிய அளவில் அதாவது, அதாவது 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களை கட்டுப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பினை வழங்கியது.
இதை ஏற்க மறுத்த, தமிழ்நாட்டைச் சார்ந்த 35 ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தீர்ப்பின் சாராம்சங்களை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
சிறப்பு ஆசிரியர் தேர்வு - வாக்குறுதி :
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை இந்த அரசு பாதுகாக்கும். ஆசிரியர்கள்,தொடர்ந்து பணி செய்வதற்கான பணிபாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.
மறுசீராய்வு மனு - அரசு திட்டம் :
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தினால்,TET முடித்து 13 ஆண்டுகளாக வெளியில், ஆசிரியர் பணியின்றி காத்திருக்கும் ஒன்றரை லட்சம் பேர் வழக்கு தொடுப்பார்கள். மேலும் தேர்வினை நடத்துவதில் சட்ட சிக்கல்கள், நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை அரசு உணர்ந்தே இருக்கிறது. அதே சமயம் தமிழ்நாடு அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
திறம்பட பணியாற்றும் ஆசிரியர்கள் :
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என அரசுப் பணியில் பணிபுரியும் 33,500 க்கும் அதிகமானோர், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட , ஆசிரியர் தகுதித் தேர்வு (TET PAPER I & II ) முடித்து 14 ஆண்டு காலமாக தொடர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி 100% தேர்ச்சியினை தொடர்ந்து மாணவர்களிடத்திலே அளித்து, தமிழக அரசுக்கு பெருமை தேடித் தருகிறார்கள். கல்வியில் தமிழ்நாட்டை தொடர்ந்து சிறப்புற விளங்கச் செய்து தலை நிமிரச் செய்துள்ளார்கள்.
பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்துக :
எனவே அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.25 கோடி ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் மற்றும் பள்ளிகளின் திறமையான நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டும் , இந்த தமிழக அரசு, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வினை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இங்கு பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் தொடர் வேண்டுகோளாக அமைகிறது.
அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் :
பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என்றால், மிகக் குறைவான சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, அரசு பள்ளிகளை ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நிறைந்த பள்ளிகளாக இயங்கும் அவல நிலை நான்கு ஆண்டுகளாக இருப்பது உச்சக்கட்ட வேதனை.
தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை :
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், இடைநிலை ஆசிரியர்களை நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறச் செய்யும் வகையில் அரசாணை 243-ல் ஒரு திருத்தத்தையாவது(Government School Rules), இந்த அரசு செய்யும் என்பதே பணியில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு தருக :
எனவே தமிழக அரசு பதவி உயர்வு சார்ந்த வலி பொருந்திய பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி HM பதவிக்கு போதுமான எண்ணிக்கையை விட 8 மடங்கு எண்ணிக்கையில் TET ஆசிரியர்கள் பணியில், 14 ஆண்டுகாலமாக சிறப்பான அனுபவத்துடன் அரசு பள்ளிகளில் பணியில் இருக்கும் போது, அவர்களுக்கு உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் படி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுகளை உரிய சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி வழங்கிட வேண்டும்.
மேலும் படிக்க : ’அரசு ஊழியர், ஆசிரியர்’ கோரிக்கையை நிறைவேற்றுக : விஜய் கோரிக்கை
ஆசிரியர்கள், பெற்றோர்களின் கனவு :
பெருமையின் அடையாளம் என்று கம்பீரமாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தி அந்தப் பெருமையை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பதே இங்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் என எல்லோருடைய இலட்சியக் கனவாக இருக்கிறது.
========