
பள்ளி வாகனம் மீது ரயில் மோதல் :
செம்மங்குப்பம் அருகே இந்த விபத்து நேரிட்டது. கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் மாணவர்கள் நான்கு பேரை ஏற்றிக் கொண்டு சென்றது. ஓட்டுநர் சங்கர் வேனை ஓட்டிச் சென்றார். செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது.
மூன்று மாணவர்கள் உயிரிழப்பு :
இந்த விபத்தில், தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன், தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ், வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில், செழியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேன் மீது மோதிய ரயில் ஆலபாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழியாக இயக்கப்படும் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேட் கீப்பர் அலட்சியமா? :
இந்த நிலையில், கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ரயில்வே கேட்டை மூடாமல் அவர் தூங்கி விட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்று விபத்தில் சிக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வேன் ஓட்டுனர் கேட்டுக் கொண்டதால், கேட்டை கேட் கீப்பர் திறந்து விட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
கேட்கீப்பர் சஸ்பெண்ட், கைது :
வட இந்தியரான கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுவதால், அவரிடம் ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைவர்கள் இரங்கல், நிவாரணம் :
இந்த விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக ரயில்வேத்துறை சார்பில் இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் முரண் இருப்பதால், விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும்.
சமூக பொறுப்பு அவசியம் :
இந்த விபத்துக்கு கேட் கீப்பர் அல்லது வேன் ஓட்டுனர் யார் காரணமாக இருந்தாலும், இந்த விபத்து அப்பாவி மாணவர்களின் உயிரை பறித்து இருக்கிறது. மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஓட்டுனரும், ரயில்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் கேட் கீப்பரும் பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால், விலை மதிப்புக்க உயிர்கள் பறிபோகாமல் இருந்திருக்கும்.