தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் : வாழ்த்து தெரிவித்து நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
Former Tamil Nadu Chief Minister Jayalalithaa's birthday: Prime Minister wishes and remembers her!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மனம் கவர்ந்த தலைவர்
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.
அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தவர்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத் திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார்.
கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்
மன்கிபாத் உரை
அவரைப் பற்றி இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது என்று வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
மன்கிபாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசியதாவது,
பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மக்கள் போற்றும் மகத்தான தலைவர்
மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என்றும் நமது நாட்டின் சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் எப்போதும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பிரபலமான தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா என்று கூறினார்.
மேலும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டவர் ஜெயலலிதா அவருடனான எனது நினைவுகள் பசுமரத்தாணி போல உள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது உறுதிப்பாடும் என்றும் நினைவு கூரப்படும் என்று ஜெயலலிதாவிற்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.

