தங்கம் புதிய உச்சம் 1,06,240 : வெள்ளி கிலோ 3 லட்சத்தை தாண்டியது
தங்கம், வெள்ளி புதிய உச்சம்
Today Gold and Silver Rate in Chennai : சர்வதேச காரணிகள் இந்தியாவில் தங்கம் விலை உயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 9ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்து சாமானிய மக்களை கண்ணீர் வடிக்க செய்துள்ளது.
சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு
ஜனவரி 9ம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,800 ரூபாய் என இருந்தது. இன்றைய தினம் ஒரு கிராம் 13,280 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு, 110 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் வரலாற்று உச்சமாக ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,06,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
5 நாட்களில் சவரனுக்கு ரூ.3,840 உயர்வு
கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 480 ரூபாயும் ஒரு சவரன் 3,840 ரூபாயும் உயர்வு கண்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதியுடன் ஒப்பிட்டால் ஒரு கிராம் தங்கம் 840 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 6,720 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒரு சவரனில் ஆபரணம் வாங்க வேண்டும் என்றால், குறைந்தது, 1.25 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும்.
24 கேரட் சவரன் ரூ.1,15,000
சென்னையில் 24 கேரட் தங்கமும் கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,488 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,15,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 11,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு சவரன் 800 ரூபாய் உயர்ந்து 88,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் புதிய உச்சம்
வெள்ளி விலை சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 300 ரூபாயை கடந்துவிட்டது. ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 292 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 307 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ ரூ.3,07,000
ஒரு கிலோ வெள்ளி 15,000 ரூபாய் விலை உயர்வு கண்டு 3,07,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கடந்த 4 வர்த்தக நாட்களில் மட்டும் கிராமுக்கு 39 ரூபாயும் கிலோவுக்கு 39,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
இனி விலை குறையாது
அமெரிக்க மத்திய வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தவிர ஈரான் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியின் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
சர்வதேச பதற்றம் குறையாத வரை, தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சத்தை தொடுவதை தடுக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
============

