

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கி கடந்த 6ம் தேதி வரை நடந்தது.
வேட்புமனுக்கள் தாக்கல்
4 நாட்கள் விடுமுறையான நிலையில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் நாளான மார்ச் 30ம் தேதி 573 வேட்புமனுக்களும், 2ம் நாளான கடந்த 2ம் தேதி 1,361 வேட்புமனுக்களும், 3ம் நாளான 4ம் தேதி 3,430 வேட்புமனுக்களும், கடைசி நாளான 6ம்தேதி 7,599 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள் பரிசீலனை, ஏற்பு
அனைத்து மனுக்களையும் கடந்த 7ம் தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
மொத்தம் 7,599 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 5,024 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மனுக்கள் தள்ளுபடி
எடப்பாடி தொகுதியில் தவெக கட்சி வேட்பாளர் உள்பட தமிழகம் முழுவதும் 2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன
108 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
இதையடுத்து நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிட்டனர்.
களத்தில் 4,630 வேட்பாளர்கள்
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட மனு தாக்கல் செய்த 7,599 பேரில் 2,460 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
509 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இறுதியாக தமிழகம் முழுவதும் 4,630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சுயேச்சைகளுக்கு சின்னம்
சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே சின்னம் கேட்டால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம், பெயர் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (பேலட் பேப்பர்) அச்சிடப்படும்.
16 பேருக்கு ஒரு மின்னணு இயந்திரம்
ஒரு தொகுதியில் 16 பேருக்கு மேல் போட்டியிட்டால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். அதன்படி கூடுதலாக ஒவ்வொரு 16 வேட்பாளருக்கும் கூடுதல் இயந்திரம் பயன்படுத்தப்படும்.
கரூரில் 79 பேர் போட்டி
இறுதியில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) இடம் பெற்றிருக்கும். தமிழகத்தில் தற்போதைய நிலையில், அதிக தொகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 பேர் களத்தில் உள்ளனர். இதனால், கரூர் தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
அம்பாசமுத்திரத்தில் 5 பேர்
குறைந்த பட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
============