

மேம்பாட்டு பணிகள் காரணமாக நிலையத்தில் தற்காலிக மாற்றங்கள் :
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.700 கோடிக்கும் அதிக மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலகத் தரத்திலான பயணிகள் வசதிகளை உருவாக்கும் நோக்கில் புதிய முனையக் கட்டிடங்கள், நவீன காத்திருப்பு அரங்குகள், மேம்படுத்தப்பட்ட நடைமேம்பாலங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல் வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் காரணமாக நிலையத்தின் சில நுழைவு வாயில்கள், நடைபாதைகள் மற்றும் பயணிகள் பயன்பாட்டு பகுதிகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எனவே எழும்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் தங்களது ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே நிலையத்தை வந்தடையவும், ரயில்வே அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் :
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சில ரயில்களின் சேவைகள் மாற்றப்படுகின்றன.
அதன்படி மன்னார்குடியிலிருந்து சென்னை எழும்பூர் வரை வரும் ரயில், செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
திருச்சி-சென்னை மலைக்கோட்டை விரைவு ரயில் செப்டம்பர் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 14 வரை மாம்பலம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.
மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்கள் நின்று செல்லும் :
மும்பை சிஎஸ்டி - எழும்பூர் ரயில் செப்டம்பர் 12 முதல் 15 வரை சென்னை கடற்கரையோடு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம்-சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் செப்டம்பர் 12 முதல் 15 வரை மாம்பலத்தோடு நிறுத்தப்படுகிறது.
இதேபோல சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் மன்னார்குடி விரைவு ரயில் எழும்பூருக்குப் பதில், செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். சென்னை எழும்பூர், சேலம் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 வரை எழும்பூருக்குப் பதில், சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
===============