
அமித் ஷா, எடப்பாடி கருத்து :
TTV Dhinakaran About ADMK : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். ஆனால், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசி வருகிறார். இதனால், கூட்டணி இடம்பெறும் கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்று தெரியாமல் உள்ளன.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் :
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக(AMMK TTV Dhinakaran) பொதுச் செயலாளர் தினகரன், “ தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதில் இடம்பெறும் அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு வழங்கப்படும். தமிழகத்தில் இந்தமுறை கூட்டணி ஆட்சிக்கான சூழல்தான் திட்டவட்டமாக தெரிகிறது.
முதல்வர் வேட்பாளர், அமித் ஷாவிடம் கேளுங்க :
அதிமுகவின் விசுவாசியான அன்வர் ராஜா திமுகவிற்கு சென்றது வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்தில் அமமுக பெயரைக் குறிப்பிடாமல் இருப்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்” இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
எடப்பாடிக்கு தினகரன் பதில் :
கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? என்ற விவாதம் வலுத்து வரும் நிலையில், அதிமுகவுக்கு பதிலளிக்கும் வகையில் தினகரன் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.