

தமிழக வெற்றிக் கழகம்
TVK Alliance 2026 : 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம், முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.
ஆளும் கட்சியான திமுக, மத்தியில் பாஜகவை கடுமையாக எதிர்த்த விஜய், தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக நின்றார்.
கூட்டணிக்கு யாரும் வராத நிலையில், 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற்று தனித்து களம்காண தவெக முடிவு எடுத்தது.
கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி
ஆட்சியை பிடிக்கும் வகையில், கூட்டணியை பலப்படுத்த தவெகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி என பாஜக ஆஃபர் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
தனித்தே போட்டி - தவெக
இவை அனைத்தும் யூகங்களாகவே நீடித்த நிலையில், கூட்டணி இல்லை தனித்து தான் போட்டி என்று செங்கோட்டையன் பேட்டியளித்து இருந்தார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்தச்சூழலில், கூட்டணி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். தனித்து தான் போட்டி, முதல்வர் முகம் விஜய், தவெக தான் தலைமை என்ற திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.
திட்டமிட்டு பொய்ச் செய்திகள்
இது தொடர்பாக அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ வதந்திகளை நம்ப வேண்டாம்.
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
யாருடனும் பேச்சுவார்த்தை இல்லை
குறிப்பாக, பாஜக, அதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் போன்றவர்களை தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
தவெக நிலைப்பாட்டில் உறுதி
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்தும் பொய்ச் செய்திகள்
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
குழப்பம் ஏற்படுத்துகிறது திமுக
இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
வதந்திகளை பகிர வேண்டாம்
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்!” இவ்வாறு தனது பதிவில் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முற்றுப்புள்ளி வைத்த தவெக
இதன்மூலம் கூட்டணி தொடர்பான அனைத்து வதந்திகளுக்கும் தவெக முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், தேர்தலில் நான்கு முனைப்போட்டி உறுதியாகி இருக்கிறது.
=====