

தமிழக கனிம வளங்கள்
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இது பார்க்க பொதுவாக தெரிந்தாலும், பின்னால் கனிம வளக்கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது என்பதுதான் உண்மை.
குறிப்பாக கேரளாவில் மலைகளை வெட்டி கற்களை எடுக்கவும், ஆறுகளில் இருந்து மணல் எடுக்கவும் தடை உள்ளது. எனவே, தமிழகத்தில் இருந்துதான் கருங்கல், மணல் ஆகிய கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கனிமவள ஏற்றுமதிக்கு தடை
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களுக்கு எம் சாண்ட், ஜல்லிகற்கள் மற்றும் கருங்கல் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்துக்கு மட்டுமே கனிம வளங்கள்
சொந்த மாநில தேவைக்கே இந்த கனிமங்கள் குறைவாகவே இருப்பதால் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேவை அதிகமாக இருக்கும் சூழலில் விலைவாசி உயரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
புதுச்சேரி, காரைக்காலுக்கு விலக்கு
அதேநேரம், இந்த ஏற்றுமதி தடையிலிருந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மட்டும்விலக்கு வழங்கப்பட்டுளது.
விதிகளை மீறி இயங்கி வந்த சில குவாரிகள் தவெக அரசு அமைந்த பிறகு மூடப்பட்டதால், உற்பத்தி குறைந்து கனிமங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவு
கனிம வளங்களை பாதுகாக்கும் பொருட்டு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், “மாநிலத்திற்குள் போதுமான விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்காக, பாறாங்கற்கள், அளவு குறைக்கப்பட்ட (உடைந்த அல்லது நொறுக்கப்பட்ட) பொருட்கள்...
எம்-சாண்ட், உலோகக் கூழ், சரளைக்கற்கள், ஆலைக்கற்கள், கைச் சக்கரைகள் மற்றும் கட்டிடம் மற்றும் சாலை கட்டுமானக் கற்கள் உள்ளிட்ட கற்களை எல்லை தாண்டி பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வது ஒழுங்குபடுத்தப்படுகிறது.
தற்காலிகமாக 3 மாதங்களுக்கு தடை
இந்தத் திருத்தம், தற்காலிகத் தடை விதிப்பதை உள்ளடக்கி, மொத்தக் கற்கள் உள்ளிட்ட செதுக்கப்படாத கற்களை எல்லை தாண்டி பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கிறது.
உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கனிம வள ஏற்றுமதியை தடுக்கும் மூன்று மாத காலத்திற்னான தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறினால் கடும் நடவடிக்கை
இத்தடையை மீறும் எவர் மீதும், தற்போதைய சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
எனவே, அண்டை மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் இது குறித்துக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
====================