

தமிழக வெற்றிக் கழகம் - விஜய்
TVK Vijay Tribute Periyar Death Anniversary in Panaiyur : நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை விஜய் நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை விஜய் அறிவித்தார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் - விஜய்
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாவட்ட வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் தவெக தலைவர் விஜய். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தடைபட்டன.
மக்களை சந்திக்கும் விஜய்
இந்நிலையில் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியார் நினைவு தினம் - விஜய்
இந்நிலையில், தவெகவின் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி(Periyar Death Anniversary), அவரது படத்துக்கு மாலை அணிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
பெரியார் படத்திற்கு விஜய் மரியாதை
தவெக தலைமை அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார்.
"சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி,
எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்." என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் மரியாதை - சர்ச்சையில் விஜய்
தவெக தலைவர் விஜய், தனது கட்சி அலுவலகத்தில் இருந்தபடியே, தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்துவது போல புகைப்படங்களை விஜய் வெளியிட்டு வருவது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அண்மையில் அம்பேத்கர் நினைவு நாளன்றும் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விஜய் என்பது நினைவு கூரத்தக்கது.
===============