
TVK Vijay Election Campaign Tour : தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் , மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டில் பேசும்போது விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் நிர்வாகிகள் செய்து வந்தனர்.
அதன்படி திருச்சியில் தனது பயணத்தை தொடங்குவார் என கூறப்பட்டது. மக்கள் சந்திப்புக்கு காவல்துறையின் அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்யப்பட்டதாகவும் ஆனால் முறையான அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்(Bussy N. Anand), காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தங்கள் தலைவர் வரும் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை(TVK Vijay Public Meeting Date) நடத்தவிருப்பதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. 20ஆம் தேதி அன்று நாகப்பட்டினம், திருவாரூர். மயிலாடுதுறையிலும் 27 ஆம் தேதி சென்னையிலும் அக்டோபர் 4 ஆம் தேதி அன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களிலும் மக்களைச் சந்திக்கிறார்.
அக்டோபர் 11 திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்கள், அக்டோபர் 18 காஞ்சிபுரம், அக்டோபர் 25 தென்சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
நவம்பர் மாதத்தில் வரும் சனிக்கிழமைகளான 1,8,15,22,29 ஆகிய ஐந்து நாள்களில் முறையே தருமபுரி, திருவண்ணாமலை, தென்காசி, கடலூர்,சிவகங்கை மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட விஜய் திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க : TVK Vijay on DMK: தவெகவை கண்டு திமுக பயப்படுகிறது: விஜய் பாய்ச்சல்
அதேபோன்று டிசம்பர் மாத சனிக்கிழமைகளிலும் மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணம் பள்ளிக்கூடங்கள் விடுமுறை நாளில் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இத்தகைய ஏற்பாடு என்று தவெக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்த பிறகே, திட்டமிட்டபடி இச்சுற்றுப்பயணம் நடைபெறும்.