
தூய்மை பணியாளர்கள் போராட்டம் :
TVK Vijay Meet Chennai Sanitation Workers : சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டம் 12வது நாளாக நீடிக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை சந்தித்த விஜய் :
தூய்மை பணிகளை தனியாரிடம் கொடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு :
அவர்களின் பிரதிநிதிகள் விஜய்யை சந்தித்து தங்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் அவர்களுக்கு துணை நிற்கும் என உறுதியளித்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் முயற்சியாக இதை விஜய் கையில் எடுத்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசுக்கு கடும் கண்டனம் :
இந்த நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ”தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கொரோனா காலத்தில் அளப்பரிய பணி :
கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது.
வாழ்வாதாரத்தை சீரழிக்க கூடாது :
அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை. தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
====