

தவெக தலைவர் விஜய்
Sengottaiyan on TVK Vijay Campaign in Erode Date : கரூர் சம்பவத்திற்கு பிறகு 72 நாட்கள் பொதுக் கூட்டங்கள் எதிலும் விஜய் பங்கேற்காமல் இருந்தார். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாண்டிச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
புதுச்சேரியில் பிரசாரம்
மத்திய அரசையும், திமுக அரசையும் கடுமையாக சாடிய அவர், புதுச்சேரி ரங்கசாமி அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இதன் காரணமாக, புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி உருவாகுமா என்ற ஐயமும் எழுந்து இருக்கிறது.
ஈரோட்டில் விஜய் பரப்புரை
இந்தநிலையில் ஈரோட்டில் பிரசார கூட்டத்திற்கு தவெக சார்பில் அனுமதி கோரிப்பட்டது. முதலில் 16ம் தேதிக்கு அனுமதி கேட்கப்பட்டு பின்னர் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் அந்தக் கட்சியில் இருந்து விலகி, தவெகவில் சேர்ந்த பிறகு அவர் பகுதியில் நடைபெறும் கூட்டம் இது.
11-1 மணிக்குள் பொதுக்கூட்டம்
எனவே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு தவெக பொதுக்கூட்டம் குறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், “ வரும் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வருகிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
விஜயை முதல்வராக ஏற்போர் வரலாம்
அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு, முதல்முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். விஜய் தான் வருங்கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம்.
அனைவரையும் இணைப்போம்
கூட்டணியில் யாரை வைக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். நேற்றைய கூட்டத்தில் தவெகவில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இணைப்போம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
தவெகவில் இணைந்ததில் தவறில்லை
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தனி. இப்போது நான் விருப்பப்பட்டு, தவெகவில் இணைந்து விட்டேன். எம்ஜிஆர் காலத்திலேயே உயர்மட்ட குழு வரையில் இருந்தவன். புதிதாக வந்தவர்கள் என்னை உறுப்பினராக நீக்க முடியாது.
என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்த தவறும் இல்லை.எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன்” இவ்வாறு செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
================