
கரூர் நெரிசல் வழக்கு
TVK Aadhav Arjuna on Karur Stampede Case : கரூர் கூட்ட நெரிசல் வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கு குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பல வித விமர்சனங்கள் செய்து, நிதிகளும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை தொடர்ந்து கொண்டு இருக்கையில், தவெக தலைவர் விஜய் காணொளி மூலம் மக்களை சந்தித்து, இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்தார். தற்பொழுது இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு நகர்ந்துள்ளது குறித்து தவெக தேர்தல் பிரச்சார மேண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பு :
டெல்லியில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவல்துறை கூறிய இடத்தில்தான் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் காவல் துறையினர்தான் எங்களை வரவேற்றனர்.
காவல்துறை வரவேற்றது ஏன்?
வேறு எங்கும் வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் அடித்து அனுப்பினர் என்று தெரிவித்துள்ளனர்.
தவெகவை முடக்க திமுக முயற்சி
தவெகவை முடக்க திமுக முயற்சித்தது. காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்தார். ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக செய்வதை நாங்கள் உணர்ந்தோம் என்றும் தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என அரசு திட்டமிட்டது.
காவல்துறை கூறியதால் வெளியேறினோம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி உள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க திமுக முயற்சிக்கிறது என்று கூறினார்.
உண்மையை வெளிக் கொண்டு வருவோம்
ஒருநபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டி அளித்தனர். விஜயின் தலைமைப் பண்பு உள்ளிட்டவை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது அதிர்ச்சியளித்தது என்று தவெக தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் அக்டோபர் 1ம் தேதி டெல்லிக்கு வந்தேன். நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுத்து அவர்களோடு இணைந்து பயணித்து உண்மையை கொண்டு வருவோம் என்று கூறினார்.
மேலும் படிக்க : "CBI கையில்" கரூர் வழக்கு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு
சரியான உத்தரவு வந்துள்ளது
41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். தவெக மற்றும் விஜயை குற்றவாளி ஆக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்கு தவறு என உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாக்கியுள்ளது. எங்கள் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. தவெக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு தவெகவை முடக்க நினைக்கிறார்கள் என எங்களுக்கு தெரியும் என்று ஆதவ் அர்ஜுனா(Aadhav Arjuna on Karur Case) தெரிவித்தார்.
============