
தவெக. மதுரை மாநில மாநாடு :
TVK Vijay 2nd Madurai Manadu Update : நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடைபெறுகிறது. 5 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
குவிந்து வரும் தொண்டர்கள் :
நேற்றிரவு முதலே மாநாட்டில் கலந்து கொள்ள தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். மதுரையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்று விஜய் அறிவுறுத்தி இருந்தும், நிறைய பேர் குழந்தைகளை மாநாட்டிற்கு அழைத்து வந்து இருப்பதை காண முடிகிறது.
கடும் போக்குவரத்து நெரிசல் :
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரைசாரையாக வாகனங்கள் மூலம் தொண்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதன் காரணமாக மதுரை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் தகிக்கிறது. சுமார் 5 லட்சம் பேர் வரை வரலாம் என்று தவெக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.
மதுரையில் வெயிலின் தாக்கம் :
வெயிலின் தாக்கம் காரணமாக மாநாட்டிற்கு வந்தவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தரை விரிப்புகளை மேற்கூரைகளாக கையில் பிடித்து அமர்ந்து வருகின்றனர். குடிநீர் வசதிகள் மற்றும் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளின் உடல்நிலையை பாதுகாக்க மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் :
மாநாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு வாட்டர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் அடங்கிய ஸ்நாக்ஸ் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.கடும் வெயில் காரணமாக 15க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தொண்டர்களை பாதுகாக்க ட்ரோன்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : TVK 2.O மாநில மாநாடு : குவியும் தொண்டர்கள், மதுரை விழாக்கோலம்
முன்கூட்டியே மாநாடு தொடக்கம் :
மாநாட்டை ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. குவியும் மக்களால் சவால்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், தவெக தொண்டர்கள்(TVK Members) தன்னார்வலராக மாறி களப்பணியாற்றி வருகிறார்கள்.
===============