

Permission Granted for Vijay's Campaign in Nellai
TVK Vijay Campaign in Tirunelveli : தவெக தலைவர் விஜய் நெல்லையில் பிரசாரம் செய்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தென் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக ஏப்ரல் 8-ஆம் தேதி (நாளை) திருநெல்வேலிக்கு வருகை தருகிறார்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இடங்களை ஆய்வு செய்த காவல்துறை, பல்வேறு நிபந்தனைகளுடன் பிரசாரத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் விஜய்
நடந்து வரும் தேர்தல் களத்தில், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த தவெக வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதியான கேடிசி நகரில் (KTC Nagar) பிரசாரம் மேற்கொள்ள கட்சி நிர்வாகிகள் அனுமதி கோரியிருந்தனர்.
காவல்துறையின் கள ஆய்வு மற்றும் அனுமதி
பிரசாரம் நடைபெறவுள்ள கேடிசி நகர் பகுதியில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்து காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விரிவான ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் சில முக்கியக் கட்டுப்பாடுகளுடன் பிரசாரத்தை நடத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெகவிற்கு காவல்துறையின் முக்கிய நிபந்தைகள்
கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பிரசாரக் களத்தில் அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரசாரப் பகுதிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தலைவர் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்தித்து உரையாற்ற வேண்டும். வாகனத்தை விட்டு இறங்கிச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவெக தொண்டர்கள் உற்சாகம்
தலைவர் விஜய்யின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
காவல்துறையின் நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றி, அமைதியான முறையில் பிரசாரத்தை நடத்தி முடிக்க கட்சி நிர்வாகிகள் தீவிர முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.