

தமிழக வெற்றிக் கழகம்
TVK Vijay Election Campaign in Salem : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, மூன்றாவது ஆண்டை தொட்டு விட்டார். முதன்முறையாக தேர்தல் அதாவது தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது.
தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம், வரும் 6ம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்குகிறது.
மக்கள் சந்திப்பு கூட்டம்
விஜய் விரைவில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகின்றார். பிப்ரவரி முதல் வாரமே விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரும் 13 அல்லது 14ம் தேதியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன.
சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம்
சேலத்தில் தான் விஜய் தனது கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருக்கிறாராம். இதற்கான அனுமதி கோரி மனு காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம். மகுடஞ்சாவடி பகுதியில் தான் விஜய் தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருக்கின்றார்.
மகுடஞ்சாவடியில் கூட்டம்
எனவே தான் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் மனு கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் தனது பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் துவங்குவது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகுடஞ்சாவடியில் ஜெயலலிதா பரப்புரை
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் சேலம் மகுடஞ்சாவடியில் தான் தனது பரப்புரையை செய்தார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அவர்கள் அங்கு தனது பரப்புரையை மேற்கொண்டார்.
ஜெயலலிதா பாணியில் விஜய்
அவரது பாணியில் நடிகர் விஜய் பிரசாரம் செய்ய இருப்பது பேசும்பொருளாக மாறியிருக்கிறது. திமுக, பாஜகவை நேரடியாக விமர்சனம் செய்யும் விஜய், தற்போது அதிமுகவையும் சீண்டி வருகிறார். அதேசமயம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டி பேசுகிறார்.
அதிமுக வாக்குகள் - குறிவைக்கும் விஜய்
இதன்மூலம் அதிமுக வாக்குகளை விஜய் தன் பக்கம் ஈர்க்க பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, மகுடஞ்சாவடியில் ஜெயலலிதா பிரசாரம் தொடங்கிய இடத்தில், தனது பரப்புரையை விஜய் மேற்கொள்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எடப்பாடி ஊரில் விஜய்
ஜெயலலிதா பரப்புரை செய்த இடம் என்பதோடு, முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரும் சேலம் தான். எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
================