”முதுகில் குத்திய காங்கிரஸ், இனி கூட்டணி இல்லை” : உதயநிதி ஆவேசம் : அதிமுக, பாஜக பக்கம் திமுக : காங்கிரஸ் பதிலடி

முதுகில் குத்திய காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் சாடிய நிலையில், அவரை துணை முதல்வராக்கியது தாங்கள் தான் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது.
Udhayanidhi Stalin accused Congress, in fufture never alliance with them, Congress responded
Udhayanidhi Stalin accused Congress, in fufture never alliance with them, Congress responded google
2 min read

அகில இந்திய காங்கிரஸ்

திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்த காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டு, 5ல் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பாகவே, தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லப் போவதாக பேச்சு அடிபட்ட நிலையில், தேர்தலுக்கு பிறகு அது உண்மையானது.

59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ்

திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளித்து, 2 அமைச்சர்களோடு, கூட்டணி அரசிலும் இடம் பெற்றது. 59 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

உடைந்த திமுக கூட்டணி

காங்கிரசை தொடர்ந்து, இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகி, தவெக பக்கம் சென்று இருக்கின்றன. இதனால், திமுக கடும் அதிருப்தியில் இருக்கிறது.

திமுக இளைஞரணி ஆலோசனை

இந்தநிலையில், திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இளைஞர் அணிச் செயலாளர், எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு நமக்கு வந்திருக்கிறது. முதலில் நமக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்த அந்தத் தேர்தல் முடிவு,

மக்களுக்கு பெரிய ஏமாற்றம்

இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவு வந்ததும் நமது எம்எல்ஏக்கள் சென்னை வர ஆயத்தமானார்கள்.

ஆனால் இப்போதைய ஆளும் கட்சியும், மற்றொரு கட்சியும் ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்தன. தமிழகத்தில் `ரிசார்ட் பாலிடிக்ஸ்’ செய்யாத ஒரே இயக்கம் திமுக தான்.

அனுமதி வாங்கிச் சென்ற கட்சிகள்

நம் கூட்டணியில் இருந்த சில கட்சிகள், நம் தலைவரிடம் வந்து, தலைவரின் உத்தரவு பெற்று, அனுமதியைப் பெற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

முதுகில் சவாரி செய்த காங்கிரஸ்

ஆனால், 20 வருடத்துக்கு மேல் நம் முதுகின் மேல் ஏறி நின்று, நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி, இன்று நம் முதுகில் குத்திவிட்டுப் போயிருக்கிறது. இதை யாரும் மறந்துவிடாதீர்கள்.

பாஜக வெற்றிக்கு காங்கிரசே காரணம்

இந்தியாவில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு நான் கூட மோடியும், அமித்ஷாவும் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால், காங்கிரஸ் கட்சி தான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்பது இப்போது தெரிகிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் சுமந்து கொண்டு இருந்தோம்.

மதச்சார்பின்மையை பாதுகாக்க கூட்டணி

மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும், பாஜகவைத் தமிழ்நாட்டுக்குள் விட்டுவிடக் கூடாது என்று நம் தொண்டர்கள், நாம் ரத்தத்தையும், வேர்வையையும் சிந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துக் கொண்டு இருந்தோம். இந்தத் தேர்தலிலும் அதைத் தான் செய்தோம். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி,

காங்கிரசோடு இனி கூட்டணி கிடையாது

இன்று நம் மக்கள் போட்ட ஓட்டில் ஜெயித்துவிட்டு, பதவிக்காகச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டார்கள். குறைந்த பட்சம் ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை, இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக்கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அவர்களை கிட்டே சேர்க்கக் கூடாது” என்று உதயநிதி ஆவேசமாக பேசினார்.

உதயநிதிக்கு காங்கிரஸ் பதிலடி

இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து இருக்கிறது. சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “எதிர்கட்சித் தலைவராக பொறுப்புடன் செயல்படவேண்டிய உதயநிதி பொறுப்பு இல்லாமல் பேசி உள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்துக் கொண்டு இளைஞரணி கூட்டத்தை கூட்டி காங்கிரசுக்கு எதிராக பேசி உள்ளார்.

துணை முதல்வராக்கிறது காங்கிரஸ்

அவரை துணை முதல்வராக தோளில் சுமந்தது காங்கிரஸ்.பாஜக ஆணைப்படி அதிமுக, திமுக கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததை அடுத்துதான் தவெக உடன் கூட்டணி அமைத்தோம்.

அதிமுகவுடன் கூட்டணி - திமுக முயற்சி

விஜய் முதல்வராக கூடாது என பாஜக நினைத்தது. மே 4- ம் தேதி மாலை பாஜக மூத்த தலைவர் பேசி அதிமுக, திமுக கூட்டணி அமைக்க முயற்சித்தார். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோரும் உறுதி செய்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திமுக

திமுக தனது பொய் நாடகங்களை நிறுத்த வேண்டும். திமுக, அதிமுகவுடன் சேர்ந்து வெகு விரைவாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். திமுகவின் கொள்கைகளை உதயநிதி குழி தோண்டி புதைத்துக் கொண்டிருந்தார். அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி.

2029 தேர்தலில் பாஜக கூட்டணியில் திமுக

2029 லோக்சபா தேர்தலை அதிமுக, திமுக, பாஜக இணைந்து சந்திக்கும்.இண்டியா கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. திமுக விலகி விட்டது, அதற்கு பதிலாக தவெக இணைந்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை நனவாகி உள்ளது.

அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் கூட்டணி மேலும் உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in