பாதுகாப்பு கேட்ட இளைஞர் படுகொலை... காவல்துறையினரே முதல்வரை 'டம்மி CM' ஆக நினைக்கிறார்களா? – உதயநிதி கேள்வி!

பாதுகாப்பு கேட்ட இளைஞர் கொலையான விவகாரத்தில் தவெக அரசு மற்றும் முதலமைச்சரை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Udhayanidhi Stalin Slams TVK Govt
Udhayanidhi Stalin Slams TVK Govt source:thamizhalai,ai generated
1 min read

சென்னையில் நடந்த கொடூர கொலை

தலைநகர் சென்னையில் திருவெற்றியூரைச் சேர்ந்த பிரதீப்ராஜ் என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லை காரணமாக தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தை அணுகிய இளைஞர் மறுநாளே படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

இளைஞர் பிரதீப்ராஜ் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பாக வெளியிட்ட வீடியோ பதிவைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், "திருவொற்றியூர் காவல் ஆய்வாளரிடம் பாதுகாப்பு கேட்டபோது, 'உயிரோடு இருக்க மாட்டாய், பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்...

முதலமைச்சரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லு, என்னை ஒன்றும் செய்ய முடியாது' என மிரட்டியதாகப் பிரதீப்ராஜ் கூறியுள்ளார். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரையே காவல்துறையினர் வெற்று முதலமைச்சராக நினைக்கிறார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு

தொடர்ந்து தனது கண்டனப் பதிவில், "காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றைத் தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால் திசைதிருப்பும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட இதில் தொடர்புடைய அனைவர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். தலைநகரில் இனி இதுபோன்ற கொலைகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ”முதல்வர் விஜய் லண்டன் பயணம்” : முதலீடுகளை ஈர்க்க தொழில்துறையினருடன் சந்திப்பு : அஜித் கார் பந்தயத்தை பார்க்கிறார்!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in