

திருப்பரங்குன்றம் தீபத் தூண்
Union Minister L. Murugan insisted that DMK government should implement court's order in Thiruparankundram case : கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எல். முருகன், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
உயர்நீதிமன்றம் உறுதி செய்தது
அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு, நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது.
திமுக அரசால் தான் பிரச்சினை
திமுக அரசும், மாவட்ட நிர்வாகமும் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி இருந்தால், பிரச்சினையே வந்திருக்காது. அரசு எடுத்த இரட்டை நிலைப்பாடு தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.
முதல்வர் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்
குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது. அதை தமிழக அரசு செயல்படுத்தி இருக்க வேண்டும். இதன் காரணமாகவே பூர்ணசந்திரன் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
திமுக அரசுக்கு எச்சரிக்கை
இவை எல்லாவற்றுக்கும் முதல்வர் ஸ்டாலின் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இரு நீதிபதிகள் அமர்வு வழங்கி இருக்கும் தீர்ப்பு திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை. தீர்ப்பினை அரசு செயல்படுத்த வேண்டும். பக்தர்கள் முறையாக சென்று தீபம் ஏற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போலீசார் தாக்குதல் - கண்டனம்
இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள். முருக பக்தர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் முருகன் கோவில் இடிக்கப்பட்டதை தட்டிக் கேட்ட, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியத்தை போலீசார் தாக்கியதை வன்மையா கண்டிக்கிறேன்.
பாமகவால் கூட்டணிக்கு பலம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே பாமக உள்ளது. தற்போது, சட்டமன்ற தேர்தலிலும் அவர்கள் கைகோர்த்து இருப்பது நல்ல பயனை கொடுக்கும்” இவ்வாறு மத்திய அமைச்சர் எல். முருகன் பேட்டியளித்தார்.
==================