

Velachery–St. Thomas Mount Elevated Train Service Begins:
Parangimalai to Velachery Train Update in Tamil : வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை 18 ஆண்டுகால காத்திருப்பிற்கு பிறகு இன்று தொடங்கியது!
கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை இன்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது.
முதல் ரயில் வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு காலை 6.05 மணிக்கு சென்றடைந்தது. மேலும் 3 நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருமார்க்கத்திலும் 43 ஜோடி ரயில்கள்
சென்னை கடற்கரை- வேளச்சேரிக்கு இடையிலான மார்க்கத்தில் 43 ஜோடி ரெயில் சேவையானது பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தென்சென்னை மக்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் எளிதாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி
ஏற்கெனவே சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக சிரமத்தை சந்தித்து வரும் மக்களுக்கு வேளச்சேரி -பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1997 முதல் பறக்கும் ரயில் சேவை
முன்னதாக, 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் பறக்கும் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு தினமும் நூறு ரயில்கள் இயக்கப்பட்டது. அதில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.
வேளச்சேரி முதல் பரங்கிமலை
ஏற்கெனவே வேளச்சேரி முதல் கடற்கறை வரை இருந்த சேவையை, பரங்கி மலை வரை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு இடைப்பட்ட நான்கரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பறக்கும் ரயில் சேவை பணி தொடங்கியது.
நிலம் கையகப்படுத்துதல் வழக்கு
ஆனால் பரங்கிமலை - ஆதம்பாக்கம் இடையிலான 500 மீட்டர் தொலைவிலான இடத்திற்கு, நிலம் கையகப்படுத்துதல் வழக்கு தொடரப்பட்டதால் அந்த பணி அப்படியே முடங்கிம் போனது.
அதன்பின் இந்த வழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் பறக்கும் ரயில் சேவைக்கான பணிகள் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதியே இந்த சேவை தொடங்கவிருந்த நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ’தற்காலிக அதிகாரப்பூர்வ சான்றிதழை’ வழங்கினார்.
18 ஆண்டுகளுக்கு பிறகு
இதைத்தொடர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டு, ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.