

தமிழில் முனைவர் பட்டம்
Veteran Poet Erode Tamilanban Passed Away : ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 1933 செப்டம்பர் 28 அன்று பிறந்தவர் ஈரோடு தமிழன்பன். இவரது இயற்பெயர் ந. ஜெகதீசன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ‘தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தமிழாசிரியராய் அரும்பணி
தமிழாசிரியராக பணியைத் தொடங்கிய ஈரோடு தமிழன்பன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர்
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அந்தக் காலக் கட்டத்தில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி, தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
புதுக்கவிதைகளின் வளர்ச்சிக்கு விதை போட்டவர்
தமிழில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு விதை போட்ட முன்னவர்களில் ஈரோடு தமிழன்பனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஹைக்கூ, சென்ரியு போன்ற ஜப்பானிய கவிதை வடிவங்களை தமிழில் அறிமுகம் செய்தவர் இவர்.
கலைமாமணி விருது பெற்றவர்
1972ம் ஆண்டு ஈரோடு தமிழன்பனுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அடுத்த ஆண்டு தமிழன்பன் கவிதைகள் நூலுக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசை வென்றார்.
சாகித்ய அகாடமி விருது
2004-ல் வெளியான இவரது வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்பாக, இந்தியாவின் இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார் ஈரோடு தமிழன்பன். 2018ல் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது பெற்றார்.
ஈரோடு தமிழன்பனின் நூல்கள்
60க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளையும், 6 பெருந் தொகுதிகளையும் வெளியிட்டு இருக்கிறார் இவர்.
பல்துறை வல்லுநர்
சிறந்த ஆசிரியர், மரபுக் கவிஞர், புதுக்கவிதை கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், திறனாய்வு படைப்பாளர், ஓவியர், திரைப்பட பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர் ஈரோடு தமிழன்பன்.
மண்ணை விட்டு மறைந்தார்
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில், ஈரோடு தமிழன்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கிய ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
====