

Vijay Appointed Leader of the Tamilaga Vettri Kazhagam Legislative Group! Plans to Meet Tamil Nadu Governor Tomorrow!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சியமைப்பதற்கான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
சட்டமன்றக்குழுத் தலைவராக விஜய் தேர்வு
சென்னையில் இன்று நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரான விஜய், சட்டமன்றக்குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலைத் தொடர்ந்து, முறைப்படி ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரும் பணிகளைத் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியுள்ளது.
நாளை ஆளுநருடன் சந்திப்பு
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நாளை (மே 6) நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் உரிமை கோருவார்.
மேலும் தனக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் ஆதரவளிக்க இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் கடிதங்களை அவர் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநரைச் சந்திப்பதற்கான நேரம் கோரப்பட்டு, அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி ஆட்சி அமையுமா?
தவெக-விற்குத் தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இரண்டு வாரங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று விஜய் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தின் முதல் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது அதிகரித்துள்ளன.
=====