படகுகளுக்கு மானியம் திமுக பணமா? : ஸ்டாலின் அரசை சாடிய விஜய்

மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? என, விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Vijay condemned DMK Government about fishermen subsidies
fishermen who written on their boats TVK name, for them officers denied subsidies, Vijay condemned DMK Government
2 min read

திமுகவை எதிர்க்கும் விஜய் :

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் மாநாடு, பொதுக்குழு, செயற்குழு என வேகம் காட்டி வருகிறார். திமுக அரசை கடுமையாக எதிர்த்து வரும் அவர், ஆளும் கூட்டணியின் வாக்குகளை பிரித்து விடுவார் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. குறிப்பாக இளைஞர், பெண்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தால், அது திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பறித்து விடும்.

தவெக என எழுதினால் மானியம் கிடையாது? :

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் எழுதப்பட்ட படகுகளுக்கு மானியம் கிடைக்காது என அதிகாரிகள் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கபட நாடக திமுக அரசு :

தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

இலங்கையால் மீனவர்களுக்கு பாதிப்பு :

ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது.

கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு :

மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மானியம் கிடையாது, உத்தரவிட்ட அதிகாரி யார்? :

இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?

மானியம் என்ன திமுக பணமா? :

அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறமுடியுமா? மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும், இவ்வாறு விஜய் வலியுறுத்தி உள்ளார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in