

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவு, 85.15% வாக்குகள் பதிவாகின.
அதிக வாக்குகள் பதிவு
இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் முதல்முறையாக 85.15% வாக்குகள் பதிவானது இந்தத் தேர்தலில் தான்.
இதற்கு முக்கிய காரணமாக தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணி மூலம், இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் என சுமார் 74 லட்சம் பேர் வரை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
விஜயால் வாக்கு சதவீதம் அதிகரிப்பு
இதற்கு விஜய்யின் வருகையும் காரணம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தவெக தலைவர் விஜயும், “இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன.
தமிழக வரலாற்றில் அரிய நிகழ்வு
ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று” என தெரிவித்தார்.
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இந்தச் சூழலில் வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதற்கு முன்னதாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஓய்வுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை திரும்பினார். அடுத்த கட்டமாக விஜய், வரும் 30ஆம் தேதி தன் கட்சி சார்பில் போட்டியிட்ட 232 வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
ஏற்கனவே வாக்குப்பதிவுக்கு மறுநாள் 24ஆம் தேதி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், தற்போது வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னையில் முக்கிய ஆலோசனை
தேர்தலில் போட்டியிட்ட 232 வேட்பாளர்களும் சென்னை வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெகவிற்கு தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் நடத்த இருக்கும் ஆலோசனை கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமைந்தால், அப்போது ஆட்சியில் யார் அமர்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தவெக செயலாற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
==================