

தனிப்பெரும் கட்சி தவெக
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்கள் ஆதரவை தவெகவிற்கு வழங்கி இருக்கிறது. அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், இடதுசாரிகள், விசிக ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் செயலர் கிர்லோஷ் குமாரை, நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்படவில்லை.
ஆதரவு கடிதம் கேட்கும் ஆளுநர்
தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
பதவியேற்பு விழா தள்ளிவைப்பு
இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா தள்ளிப் போகிறது. அநேகமாக சனிக்கிழமை பதவியேற்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆளுநருடன் 2வது முறையாக சந்திப்பு
இந்தநிலையில், ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் சந்தித்து பேசினார். 24 மணி நேரத்தில் நடைபெற்ற இந்த 2வது சந்திப்பு தேசிய அளவில் பேசுபொருளானது. சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஆளுநர் நிலைப்பாடு - கருத்து
ஆளுநர் வேண்டுமேன்றே தாமதப்படுத்துவதாகவும், விஜயை கட்டுப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திருமாவளவன், வீரபாண்டியன், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
அழைக்காத ஆளுநர்
இந்தநிலையில், விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இதனால், அடுத்து என்ன என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆலோசிக்கும் கட்சிகள்
இதனைத்தொடர்ந்து, தவெக எம்எல்ஏக்கள், சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அதேபோன்று, திமுகவும், அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை நடத்தி இருக்கின்றன.
===