தமிழகத்தில் SIR கடந்து வந்த பாதை : வாக்காளர்கள் 5.67 கோடி : நீக்கம் 74.07 லட்சம், 27.53 லட்சம் பேர் சேர்ப்பு

Tamil Nadu SIR 2026 Final Voters List : தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி, 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 27.53 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
SIR 2026 Final Voters List : voters in Tamil Nadu 5.67 crore, 74.07 lakh voters removed,  27.53 lakh new voters added
SIR 2026 Final Voters List : voters in Tamil Nadu 5.67 crore, 74.07 lakh voters removed, 27.53 lakh new voters addedgoogle
2 min read

நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகள்

Tamil Nadu SIR 2026 Final Voters List : நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், அதன்படி, கடந்த ஆண்டு பிகாரில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் எஸ்ஐஆர், வரைவு வாக்காளர் பட்டியல்

பின்னர் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர்,

இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என தேர்தல் ஆணையம் கணக்கிட்டு விளக்கம் அளித்தது.

பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அனுமதி

இதைத்தொடர்ந்து டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்காக வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி, பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் கோரி 27.85 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பங்களை சரி செய்யும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

அதன்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

74.7,207 பேர் நீக்கம்

இறுதியாக, 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிகை 2,77,38,925 ஆகும். பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர். மூன்றாம் பாலினம் 7,617 பேர் உள்ளனர்.

முதல் தலைமுறை வாக்காளர்கள் 12,51 லட்சம்

18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 12.51 லட்சம் ஆகும். மாற்றுத்திறனாளிகள் என குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் 3.99 லட்சம் பேர் உள்ளனர்.

பெரிய தொகுதி சொழிங்கநல்லூர்

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இந்த தொகுதியில் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறிய தொகுதி துறைமுகம்

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 1,16,896 உள்ளனர்.

இணைய தளத்தில் சரி பார்க்கலாம்

வாக்காளர் பட்டியலினை, தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in மூலம் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தேவை இருந்தால், பெயர் சேர்க்க (படிவம்-6), திருத்தம் (படிவம்-8) அல்லது நீக்கம் (படிவம்-7) செய்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.

பெயரை சேர்க்க மீண்டும் வாய்ப்பு

கடந்த ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்த, ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லாத அனைத்து தகுதியுள்ள குடிமக்களும், இப்போதும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

‘1950’ என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.

மார்ச்சில் தேர்தல் தேதி

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் குழு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திய பிறகு, தேர்தல் தேதியை அறிவிக்கும்.

அதன்படி, ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

===========

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in