

தாராபுரம், மதுராந்தகம்
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கியது.
தேர்தல் தொடங்கும் முன்பே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
காலை 10 மணி நிலவரப்படி, அதன்படி, தாராபுரம் தொகுதியில் 20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுராந்தகம் தொகுதியிலும் 20 சதவீதத்திற்கு மேலாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இதேபோல, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 19.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
எம்எல்ஏக்கள் ராஜினாமா - இடைத்தேர்தல்
சட்டமன்ற பொதுத் தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் வென்ற அதிமுக வேட்பாளர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அடுத்த சில நாட்களில் ராஜினாமா செய்தனர்.
அதேபோன்று கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் வென்ற அதிமுக வேட்பாளர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் - இடைக்கால தடை
எனினும் இந்த குறிப்பிட்ட 4 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல்
இதனிடையே, நீதிமன்ற தடையில் சிக்காத தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
5 முனைப்போட்டி
ஆளும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.‘
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தாராபுரத்தில் 320 வாக்குச்சாவடிகள்
பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதி வாக்காளர்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,11,295 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 1,03,943 பேர். பெண்கள் 1,07,288 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 64 பேர்.
தாராபுரம் தொகுதி வாக்காளர்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,22,875 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 1,06,875 பேர். பெண்கள் 1,15,523 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர்.
வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படை மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
====================