

'Whistle Revolution' Opinion Polls Will Prove False: Vijay Is Going to Rule Tamil Nadu — Sengottaiyan Affirms!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 கடந்த 23 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மீண்டும் திமுக அல்லது அதிமுக ஆட்சி?
இதற்கிடையில் நேற்று வெளியான பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மீண்டும் திமுக மற்றும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
திமுக ஆட்சி அமைக்கும்?
மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமான கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?
Peoples Pulse, Matrize மற்றும் Agni News போன்ற நிறுவனங்கள், திமுக பெரும்பான்மையுடன் 120 முதல் 145 இடங்களைக் கைப்பற்றும் மீண்டும் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளன.
அதிமுக ஆட்சி அமைக்கும்?
அதேசமயம், JVC - India Today மற்றும் Spick Media ஆகிய நிறுவனங்களின் கணிப்புகள் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறுகின்றன.
தவெக ஆட்சி அமைக்கும்?
மேலும் Axis My India கணிப்பின்படி தமிழக வெற்றிக் கழகம் 120 இடங்கள் வரை பிடித்துப் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?
இருப்பினும், இந்தக் கணிப்புகள் அனைத்தும் ஒரு முன்னோட்டம் மட்டுமே. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகளே உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்புகள் வெறும் மாயை
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது கருத்துக்கணிப்புகள் குறித்து அவர் கூறுகையில், "இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் கருத்துக்கணிப்புகளுக்குப் பின்னர் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்புகளுக்கும் வெற்றிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று விமர்சித்தார்.
விஜய்யின் விசில் புரட்சி
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையாலேயே இத்தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இதுவரை பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி எனப் பல புரட்சிகளைப் பார்த்திருப்போம்.
ஆனால் இப்போது த.வெ.க தலைவர் விஜய்யின் 'விசில் புரட்சி' தமிழகத்தில் மட்டுமல்ல, உலகளவில் தெரியப்போகிறது" என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.
200-க்கும் மேற்பட்ட இடங்கள்
வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்றும், தவெக தலைவர் விஜய்தான் தமிழகத்தை ஆளப்போகிறார் என்றும் செங்கோட்டையன் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.