தமிழகத்திற்கு அநீதி...? : மு.க.ஸ்டாலின் போட்ட கூப்பாடு பொய் என்பது அம்பலம் : அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயர்கிறது, மகளிர் அரசியல் அதிகாரத்தை எதிர்க்கும் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? என அன்புமணி வினவியுள்ளார்.
"Will M.K. Stalin, who opposes women's political empowerment, apologize?" asks Anbumani in an X post.
"Will M.K. Stalin, who opposes women's political empowerment, apologize?" asks Anbumani in an X post.source:google
4 min read

தொகுதிகள் மறுவரையறை விவகாரத்தில் வீண்பழி சுமத்தி, பொய் பரப்புரை செய்த மு.க.ஸ்டாலின் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப் படும் தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது;

50% அதிகரிப்பு

அனைத்து மாநிலங்களையும் போலவே 50% அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும்?

இதன் மூலம் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட கூப்பாடு பொய் என்பது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது.

மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்

அந்தச் சட்டத்தின்படி அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், 2026 27ஆம் ஆண்டில் அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தப் பணிகள் நிறைவடைய 2030 ஆம் ஆண்டுக்கு மேலாகும் என்பதால். 2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், அதன்பின் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இது மிகவும் தாமதம் என்பதை உணர்ந்த மத்திய அரசு, இப்போது 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தீர்மானித்துள்ளது.

273 இடங்களை மகளிருக்கு வழங்கவும் அரசு முடிவு

இதற்காக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யவும், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும், அதில் 273 இடங்களை மகளிருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த முன்வரைவு உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் போது, தமிழ்நாட்டின் தொகுதிகள் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது.

அபாண்டமான குற்றச்சாட்டு

ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி, அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் தடுமாறி வந்த மு.க.ஸ்டாலின், தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைத்து தேர்தல் பரப்புரையை திசை திருப்ப முயன்றார்.

தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக குறைக்கப்படாது; விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தப்படும் என்று நானும், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் அளித்த விளக்கத்தைக் கூட ஏற்க மறுத்து விட்டார்.

நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது; மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்;

தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்த முயற்சி

அதுவும் நாடாளுமன்றத்தில் தான் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். அதுமட்டுமின்றி, கறுப்புக்கொடி போராட்டம், தொகுதி வரையறை சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் என்று தேவையில்லாத பதட்டத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயன்றார்.

ஆனால், தொகுதிகள் மறுவரையறையின் போது, தமிழகத்தின் தொகுதிகள் எந்த வகையிலும் குறைக்கப்படாது;

மற்ற மாநிலங்களின் தொகுதிகள் எவ்வாறு 50% அதிகரிக்கப்படுகின்றனவோ, அதேபோல், தமிழ்நாட்டின் தொகுதிகளும் 50%, அதாவது 59 இடங்களாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களும்,

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் நாடாளுமன்றத்தில் அறிவித்ததன் மூலம் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வந்த பொய்யான பரப்புரை முறியடிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, மு.க.ஸ்டாலின் அவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

129 லிருந்து 195 ஆக அதிகரிப்பு

தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரம், தெலுங்கானம், கேரளம், கர்நாடகம் ஆகிய 5 தென் மாநிலங்களிலும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 129 லிருந்து 195 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இந்த மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் இப்போதுள்ள 23.76 விழுக்காட்டிலிருந்து 23.87 விழுக்காடாக சற்று அதிகரிக்குமே தவிர எந்த வகையிலும் குறையாது.

இதன் மூலம் தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மு.க. ஸ்டாலினும், அவரது சகாக்களும் நடத்திய நாடகங்கள் படுதோல்வி அடைந்திருக்கின்றன.

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது, தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் எந்த வகையிலும் குறையக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.

இப்போது எவ்வாறு மு.க.ஸ்டாலின் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறாரோ, அதேபோல் கடந்த ஆண்டு மார்ச் மாதமும் பதட்டத்தை ஏற்படுத்த முயன்றார்.

அது தொடர்பாக விவாதிக்க கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நானே பங்கேற்று, மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இப்போது 7.20% ஆக உள்ளது.

தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது இந்த விகிதாச்சாரம் மாறக்கூடாது என்று வலியுறுத்தினேன்.

அதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில், தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவிகிதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது என்ற கோரிக்கை புதிதாக சேர்க்கப்பட்டது.

தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாடு முழுமையாக ஏற்கப்பட்டிருப்பதை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் உறுதி செய்திருக்கின்றனர்.

உண்மையில் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 58 ஆக இருக்க வேண்டுமா? அல்லது 59 ஆக இருக்க வேண்டுமா? என்ற வினா எழுந்த நிலையில், 59 என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 விழுக்காட்டிலிருந்து 7.23% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை.

மு.க.ஸ்டாலினின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ வந்து விடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

தொகுதி மறுவரையின் மூலம் தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயர்த்தப்படும்; அதில் 20 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும்.

இப்போது தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்கு 5 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்தலில் குறைந்தது 20 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்கள் தவிர பொதுத்தொகுதிகளில் இருந்து கூடுதலாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.

அதேபோல், தமிழக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 351 ஆக உயர்த்தப்படும் போது, 117 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதையும் விரும்பவில்லை. அதனால் தான் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்க்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நகலை எரிப்பது குற்றம் மட்டுமின்றி, தேசத் துரோகமும் ஆகும்.

இப்போது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை எரித்ததற்காக மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முற்போக்குவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கும் அதிகாரம் அளிக்கும் இந்த விவாகாரத்தில் மிகவும் பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறார்; அவரது செயல்பாடுகள் தரம் தாழ்ந்த வகையில் உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 59 ஆக உயர்த்தி, குறைந்தது 20 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாவதற்கு வகை செய்யும் இந்த சட்டத்தை எதிர்க்கும் திமுகவையும், எந்த பகுத்தறிவும் இல்லாமல் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சியினரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ளன. இந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் வெறும் 66-ஐ மட்டும் தான் நிறைவேற்றியிருக்கிறார்.

இதனால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆட்சியாளர்களுக்கு எதிரான கொந்தளிப்பை மடைமாற்றம் செய்யவே இத்தகைய சதிகளில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார்.

மு.க. ஸ்டாலினின் அனைத்து சதிகளும் படுதோல்வி அடைந்து விட்ட நிலையில், தொகுதிகள் மறுவரையறை விவகாரத்தில் வீண்பழி சுமத்தி, பொய் பரப்புரை செய்த மு.க.ஸ்டாலின் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மாறாக, இனியும் திருந்தாமல், புதிது புதிதாக செல்லாத காரணங்களைக் கூறி, மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட முன்வரைவுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தாய்மார்களும் தங்களுக்கு எதிரான திமுகவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பார்கள் என்று அன்புமணி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in