

கோவை பெரியார் அறிவுலகம்
கோவை காந்திபுரத்தில் சுமார் ₹300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் (Periyar Arivulagam), நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இதற்கான பணிகள் நிறைவு பெற்றன.
முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 16ம் தேதி இதனை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். நூலகத்திற்கான நூல்கள் கொள்முதலில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெருமாள் முருகன் கட்டுரை
இதுபற்றி கட்டுரை ஒன்றை எழுதி இருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன், பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் அபத்த குப்பைகளாக இருப்பதை சுட்டிக் காட்டி உள்ளார்.
புதிய தலைமுறையின் https://www.sindhai.com இணையதளத்தில் அவர் எழுதி இருக்கும் கட்டுரையில்,
300 கோடியில் நூலகம்
“கடந்த திமுக ஆட்சியில் தீட்டப்பட்ட ’பெரியார் அறிவுலகம்’ என்னும் நவீன நூலகத் திட்டம் தற்போது முடிவு பெற்று முதல்வர் ஜோசப் விஜய்யால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ முந்நூறு கோடி ரூபாய் செலவில் ஏழு தளங்களைக் கொண்ட கட்டிடமாக இந்நூலகம் உருப்பெற்றுள்ளது.
நவீன வசதிகளுடன் நூலகம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் போல இந்நூலகமும் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் முகப்பில் பெரியார் சிலை அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
’பெரியார் அறிவுலகம்’ தொடரும் சர்ச்சை
’பெரியார் அறிவுலகம்’ செயல்பாட்டுக்கு வந்ததை ஒட்டிப் பல்வேறு சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதைத் திறந்து வைத்த முதல்வர் ’திமுகவின் திட்டம்’ என்பதைப் பெயரளவுக்கேனும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என விவாதம் நடைபெற்றது.
மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா
பெரியார் பெயரிலான நூலகத்துக்கு ஆயுதபூஜை விடுமுறை பொருந்தாது என்னும் சர்ச்சைகளும் தொடர்ந்தன. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்நூலகத்தை 2026 நவம்பர் 4 அன்று பார்வையிட்டார். அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.
ஓர் ஆட்சியில் கொண்டுவரும் திட்டம் அந்த ஆட்சியிலேயே நிறைவு பெறும் என்று சொல்ல முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்த ஆட்சியில் நிறைவு பெறுவதும் அதன் பலன் யாருக்கு என்னும் விவாதம் அரசியல் அரங்கில் நடைபெறுவதும் சாதாரணம். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
பெரியார் நூலகம் தொடக்கமே வீழ்ச்சியா?
பிரம்மாண்டமாக உருவாகும் ஒவ்வொன்றும் உள்ளீடற்ற வெற்றுக் கட்டிடங்களாகச் சரிந்து போவதுதான் தமிழ்நாட்டின் பொதுவிதி. சரிவு தொடங்கி வீழ்ச்சியடையச் சிலகாலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பெரியார் அறிவுலகத்தின் தொடக்கமே வீழ்ச்சியாக அமைந்துவிடும் போல.
சாதனையில் யாருக்குப் பங்கு அதிகம் என்னும் விவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் நூலகத்தின் உள்ளே போய்ப் பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
வாங்கிய நூல்கள் எத்தகையவை?
போட்டித் தேர்வர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்புக்கும் பயன்படும் வகையில் நூல்கள் இங்கே இருக்கின்றன என்று சொல்கிறார்கள். நூல்கள் வாங்க வல்லுநர்களின் பரிந்துரை எல்லாம் பெறப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் வாங்கியுள்ள நூல்கள் எத்தகையவை?
’அகல்விளக்கு பதிப்பகம்’ - 1,600 நூல்கள்
நான்காம் தளத்தில் உள்ள தமிழ் நூல்களைச் சான்றுக்குப் பார்ப்போம். ’அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் (ஆம், மெனக்கெட்டு எண்ணிப் பார்த்தோம்) அலமாரிகளை அலங்கரிக்கின்றன.
இப்படி ஒரு பதிக்கமா? எங்கே இருக்கிறது?
ஒருசில தவிர எல்லாம் கெட்டி அட்டை போடப்பட்டவை. நாற்பது ஆண்டு காலமாக இலக்கிய உலகில் புழங்கிவரும் எனக்கு 1800 நூல்களை வெளியிட்டுள்ள ’அகல்விளக்கு பதிப்பகம்’ அறிமுகம் ஆகவில்லை. என் வாசிப்புத்தளம், அறிவுத் தேடல் அவ்வளவு சுருங்கியது போலும்.
நூல்களில் விலை எல்லாம் ரூ.1,000க்கு மேல் தான்
’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் முந்நூறு பக்க நூலின் விலை ரூ.1445/- மட்டும்தான்! ஒவ்வொரு நூலின் விலையும் இப்படித்தான். பிற பதிப்பகங்கள் எல்லாம் முந்நூறு பக்க நூலுக்கு முந்நூற்று ஐம்பது ரூபாய்தான் விலை வைக்கிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள்!
சரி, இத்தனை விலையுள்ள நூல்கள் பெரும் உழைப்பில் அரிய செய்திகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் என்று கருதி உள்ளே பிரித்துப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் நூல் இப்படித் தொடங்குகிறது:
நாலடியார் தத்துவ ஞானியா?
‘நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி. அத்துடன் உலகம் முழுவதும் அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தின் தொலைநோக்கிய அணுகுமுறை போன்றவராக வாழ்ந்தவர். அவர் தனது பாடல்களிலும் கவிதைகளிலும் மனித வாழ்க்கையின் உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.’
இதை வாசித்து தலைசுற்றிப் போனேன். கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகள் தமிழ் இலக்கியக் கல்வியை முறையாகப் பயின்றும் முப்பது ஆண்டுகள் அக்கல்வியைப் பயிற்றுவித்தும் வந்த எனக்கு நாலடியார் ஒரு கவிஞர், தத்துவஞானி என்பது தெரியவில்லையே.
யார் இந்த சூர்யா பாலு
பெயர் தெரியாத சமண முனிவர்கள் எழுதிய நாலடி வெண்பாக்கள் நானூற்றின் தொகுப்புத்தான் நாலடியார் என்று படித்து வந்திருக்கிறேனே, அது பொய்யா? இத்தனை ஆண்டுகள் கழித்து சூர்யா பாலு என்பவரும் அகல்விளக்கு பதிப்பகமும் இப்படி ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த உண்மையை நூலின் பிற்குறிப்பாகவும் போட்டிருக்கிறார்கள். நூல் முழுவதும் இப்படிப்பட்ட உண்மைகளால் நிறைந்து வழிகிறது. அந்தக் கருமாந்திரத்தை வாசிக்கும் பொறுமையும் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் எனக்கில்லை.
ஏதோ ஒருநூல் இப்படி அமைந்துவிட்டது போலும் என்று இன்னொரு நூலை எடுத்துப் புரட்டிப் பார்த்தோம். ’தேவ் நிலன்’ என்னும் நானறியாத அல்லது யாரும் அறியாத தமிழறிஞர் எழுதிய ’மதுரைக் காஞ்சி ஒரு இலக்கியப் பயணம்.’ இதுவும் முந்நூறு பக்கம் கொண்ட 1395/- ரூபாய் விலை போடப்பட்ட நூல். இதிலிருந்து சிறுபகுதியைப் பார்க்கலாம்:
யார் இந்த கூழத்திப் பெருவழுதி?
’மதுரைக்காஞ்சி என்பது மதுரைக் கூழத்திப் பெருவழுதி என்ற புலவர் பாடிய 782 செய்யுள்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பாகும்.’ (ப.5).
’அரசர் மதுரைக் கூழத்திப் பெருவழுதி உண்மையில் ஒரு தீர்க்க தரிசனத்துடன் கூடிய வீர அரசன். இவர் யுத்தங்களில் வெற்றி பெற்றதோடு யுத்தத்திற்குப் பிறகு ஏற்படும் சமூக பொருளாதார பக்க விளைவுகளையும் கையாளும் திறன் பெற்றிருந்தார்’ (ப.13).
இப்படித்தான் நூல் முழுவதும் அமைந்திருக்கிறது. யாரப்பா, இந்தக் கூழத்திப் பெருவழுதி? மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் என்று படித்திருக்கிறேன். அவர் புலவர்தான். அரசர் அல்லர். இந்நூலை எழுதிய ’தமிழறிஞர்’ தேவ் நிலன் எங்கிருந்து புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்? ஒன்றும் விளங்கவில்லையே.
பாரதியார் கதை எழுதி இருக்கிறாரா?
பழந்தமிழ் இலக்கியம்தான் இப்படி. இருபதாம் நூற்றாண்டுக்கு வந்தால் பாரதியார்தானே முக்கியமான கவிஞர்? ’பாரதியார் கதைகள்’ என்றொரு நூல். இது பாரதியார் எழுதிய கதைகளைக் கொண்ட நூலா அவர் கதைகளைப் பற்றிய நூலா? ஒன்றும் விளங்கவில்லை.
ஆசிரியர் பெயர்: மனிஷா சரவணன். ’சாதனையின் முகம்’ என்றொரு கதையைப் பாரதியார் எழுதியிருக்கிறாராம். பாரதியாரின் எழுத்துக்களைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக்கொண்டுவரும் ய.மணிகண்டன் போன்ற பாரதி ஆய்வாளர்கள்தான் இதை உறுதிப்படுத்த வேண்டும். அக்கதை என்னவாம்?
தமிழுக்கு வந்த சோதனை!
’மதுரை நகரில் பிறந்த இராமன் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் வாழ்க்கைப் பயணம் தொலைந்திருந்தது. அதிகமான வேலை இல்லாத காலத்தில் அவன் செருப்புச் சூடிகளை விற்கும் தொழிலில் பணி செய்கின்றான். அவன் சாதாரண வாழ்க்கையில் மிகவும் அழுத்தமான ஒருவராக வாழ்ந்தது. ஆனால் அவன் மனதில் எப்போதும் ஒரு விருப்பம், ஒரு கனவு இருந்தது – நல்ல கல்வி, உயர்ந்த வாழ்வு மற்றும் முன்னேற்றம்.’ (ப.138).
இதுதான் பாரதியாரின் மொழிநடையா? இப்படியும் தமிழ் உண்டா? என்னே, தமிழுக்கு வந்த சோதனை!
கீழடி சிற்பம் நந்தியா?
ஜோதி ஹரிஹரன் என்பவர் எழுதிய ’கீழடி செப்பும் வரலாறு’ என்னும் நூலில் அங்கே கிடைத்த சிற்பமாக பெரிய நந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜோதி ஹரிஹரன் தொல்லியல் ஆய்வாளராக இருக்கக் கூடும். அவரே களத்தில் இறங்கி யாரும் அறியாத இரவில் அந்நந்தியைக் கண்டுபிடித்துத் தானே தூக்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ நூலில் வரும் அரிய தகவல்களைப் பாருங்கள்:
முத்துவேலு சுப்பையா அய்யர் - தமிழக முதல்வர்?
’தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) இருந்தார். அவர் அத்தியாவசியமான முதன்மை தலைமையிலும் சட்டப்பேரவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்
அதன் பிறகு 1952-ம் ஆண்டில் இருந்து திராவிட கிழக்கின் அரசியல் வீரவாகிய மு.க.இராமசாமி முக்கிய அரசியல் தலைவராக நின்றார். அவரின் வேலையை பிறகு காமராஜர் (1954 – 1963) எடுத்தார்.’ (ப.108)
அறிமுகமே இல்லாத ஆசிரியர்கள்
நூல் முழுவதும் இப்படித்தான். இத்தனை காலம் தமிழர்கள் அறியாத தகவல்கள்! அகல்விளக்கு பதிப்பகத்தின் எல்லா நூல்களும் இப்படித்தான். இவற்றை எழுதிய ஆசிரியர்களின் பெயர்கள்
ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர், ராணி பன்னீர், தாமரை கார்த்தி, தாமரை சிவா, தாமரை முரளி, சூர்யா பாலு, மங்களேஸ்வரி பாலு, விஜய பாலு, விஜய ஆதித்தன், திரிஷா விஜய், மோனிகா சூர்யா, மோனிகா ரவி, பிருந்தா சேதுராமன், தர்ஷினி சேதுராமன், மனிஷா சரவணன், மனிஷா தினேஷ், திவ்யா தினேஷ்.
நூல்களுக்கு அபத்தமான தலைப்புகள்
இப்பதிப்பகம் வெளியிட்டுள்ள சில நூல்களின் தலைப்புகளையும் பாருங்கள்.
நகர நீர் மேலாண்மை: பொதுமக்களின் உரிமை – கீர்த்தி கோவிந்த்
நகரத்து நெடுஞ்சாலை கவனிகள் – மாலதி சேதுராமன்
நகரத்தின் ஊசல்: மாசுபாடும் மனித வாழ்வும் – கார்த்திகா அவினாஷ்
நகரம் விழுங்கும் இயற்கை – மனிஷா ராம்சரண்
நகரமும் நம்பிக்கையும்: பொதுப் பாதுகாப்பின் சவால்கள் – மது சக்தி
நகர நீர் சுகாதாரம்: பொதுநலத்தின் அவசியம் – தாமரை கார்த்தி
நகர நீர் சட்டங்கள்: பொதுநலப் போராட்டம் – சக்தி சூர்யா
நகர நீர் கல்வி: சமூக விழிப்புணர்வு – கார்த்திகா அவினாஷ்
நகர நீர் எதிர்காலம்: சமத்துவ உலகம் – ஜோதி ஹரிஹரன்
நகர நீர் அமைப்புகள்: வரலாற்றுப் பார்வை – ஜோதி ஹரிஹரன்
நகர நீர் ; பொதுத்துறை வெற்றி – கீர்த்தி கோவிந்த்
நூல்களில் ஒளிந்திருக்கும் பூதங்கள்
அகல்விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் நூற்றுக்கும் மேல் அலமாரிகளில் இடம்பெற்றுள்ளன. இவையும் மேற்காட்டிய நூல்களோடு போட்டியிடத் தக்கவை. இன்னும் பிரித்து அடுக்காத புத்தகப் பெட்டிகள் நூற்றுக்கணக்கில் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் எத்தகைய பூதங்கள் ஒளிந்திருக்கின்றனவோ? ஆங்கில நூல்களில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ?
நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல்
எப்படியாயினும் சரி, நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி. அது கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புதுப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
பொய்ப்பெயர்களில் ஆசிரியர்
தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப்பெயர்கள். நூல்களில் காணப்படும் ’பன்னாட்டுத் தரப் புத்தக எண்’ (ISBN) அனைத்தும் பொய்யானவை. அவற்றை இணையத்தில் தேடினால் அப்படிப்பட்ட எண் இல்லை என்றே தகவல் வருகிறது. பதிப்பக முகவரியும் போலி என்றே தோன்றுகிறது.
போலியான பதிப்பக முகவரி
அகல் விளக்கு பதிப்பக முகவரி இது: 3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091. மடிப்பாக்கத்தில் பாரத் நகரோ பிரம்மபுத்திரா தெருவோ இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டவில்லை. நூலில் akalvilakkupathipagam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அது இந்நூல் விநியோகத்துக்காக உருவாக்கப்பட்டது போலும். கைப்பேசி எண் எதுவும் இல்லை.
கோடிக்கணக்கில் ஊழல் - பின்னணியில் யார்?
போலிநூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன? ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விசாரணைக் குழு அமைத்து நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன் அந்நூல்களை எல்லாம் நூலக அலமாரிகளில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு பெருமாள் முருகன் எழுதி உள்ளார்.
===================