திமுக, அதிமுகவுக்கு கொடுத்தீங்க... : ”எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” : மாற்றத்தை தருகிறோம், சீமான் பரப்புரை!

திமுக மற்றும் அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
You gave chance to DMK and ADMK. Give us a chance once, Naam Tamilar Seeman Campaign
You gave chance to DMK and ADMK. Give us a chance once, Naam Tamilar Seeman Campaign google
2 min read

நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. வேட்பாளர்களை அறிவித்த சீமான், திருத்தணியில் தனது பரப்புரையை நேற்று தொடங்கினார்.

வேலூரில் சீமான் பிரசாரம்

2வது நாளாக இன்று வேலூரில் அவர் பிரசாரம் செய்தார். மண்டி வீதியில் நடைபெற்ற பரப்புரையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திருமாறன், வேலூர் தொகுதியில் போட்டியிடும் சோனியா, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்தார்.

எல்லாம் தனியார்மயம்

”ஒளி, காற்றாலை எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்து விட்டோம். ஆனால் ஆபத்தான அணு உலை, அனல் மின்சார நிலையத்தை அரசு வைத்திருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் வராத சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம் இதையெல்லாம் தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டோம். அதற்கு விளைநிலங்களைப் பறித்து பறித்து கொடுத்து விட்டோம்.

தனியார் மயத்தால் அரசுக்கு இழப்பு

சூரிய ஒளியில் மின் தகடுகள் போடுவது, காற்றாலை மின்சாரத்தை எல்லாம் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் தொழிலாகக் கொடுத்து விட்டனர். அவர்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதால், நாட்டிற்கு 11.2 லட்சம் கோடி கடன்.

உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை என்ற கேள்வியை யார் எழுப்புவது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு ரூபாய் என்று கமிஷன் வைத்தால் கூட அவர்களுக்கு பல நூறு கோடிக்கு மேல் லாபம் வருகிறது.

கடன் வாங்கி என்ன செஞ்சீங்க!

பத்தரை லட்சம் கோடி கடனைப் பெற்று சரியான, சமமான, தரமான கல்வியை நாட்டு மக்களுக்கு கொடுத்து விட்டோம் என்று உங்களால் சொல்ல முடியுமா?

மருத்துவத்தின் தரத்தை உயர்த்திவிட்டது என் நாடு என்று சொல்ல முடியுமா?

தடையற்ற மின் உற்பத்தி வினியோகம் பயணிக்க சரியான பாதை, தரமான போக்குவரத்தை விட்டார்களா.

70 லட்சம் பேருக்கு வேலையில்லை

படித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிவிட்டு 70 லட்சம் பேர் வேலைக்கு காத்திருக்கிறானே, அவனுக்கு வேலை இல்லை நிலையை உருவாக்கிவிட்டது.

எல்லோருக்கும் வேலை கொடுத்து விட்டோம் என்று சொல்ல முடியுமா?எதனால் இவ்வளவு கடன் வந்தது?

இலவச அரிசிதான் வளர்ச்சியா?

காலம் முழுவதும் உழைத்து, உழைத்து களைத்திருக்கிற உழவர் குடி மக்கள், இலவச அரிசி போட்டால் தான் வாங்கிச் சாப்பிட்டு வயிறு வளர்த்து உயிர் பிழைக்க முடியும் என்கிற ஏழ்மை, வறுமை நிலையில் வைத்திருந்தால் இது எப்படிப்பட்ட வளர்ச்சி? எப்படிப்பட்ட போக்கு?

பண்டிகையை கூட கொண்டாட முடியாதா?

தமிழனுக்கென்று ஒரே ஒரு பண்டிகை, தேசியப் பண்டிகை 'பொங்கல்'. ஆண்டுதோறும் உழைத்து ஓராண்டுக்கு ஒருமுறை வருகிற அந்த தேசத்தின் திருவிழா.

தேசியப் பண்டிகைக்கு அவன் அரிசி, வேட்டி,சேலை,கரும்பு வாங்கி கொண்டாட முடியாதா? அரசு காசில் வேட்டி சேலையை கொடுக்கறதுக்கு உன் முத்திரை எதற்கு வருகிறது? உன்னுடைய சின்னம், உன்னுடைய படம் ஏன் வருகிறது?

போராட்டங்களுக்கு அனுமதிப்பது பெருமையா?

முதல் அமைச்சர் சட்டசபையிலே பேசுகிறார், ' 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு நாங்கள் அனுமதி கொடுத்திருக்கிறோம்' என்று.

இதில் என்ன பெருமை?போராட வேண்டிய ஒரு லட்சம் பிரச்சனைகளை என் மக்களுக்குள் திணித்து இருக்கிறீர்கள், இது கொடுமை!

அப்போ இத்தனை பிரச்சனைகளை நமக்கு அளித்தது யார்? இந்தப் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு நிலையை நமக்கு உருவாக்கியது யார்? இந்த ஆட்சியாளர்கள் தான்.

மாறிமாறி ஆட்சி என்ன பலன்?

திமுக விட்டால் அதிமுக, அதிமுக விட்டால் திமுக என்ன மாற்றத்தைக் கண்டீர்கள்? ஆள் மாறுகிறது, ஆட்சி மாறுகிறது, ஆட்சி முறை மாறுகிறதா?

இவர் வந்தாலும் ஊழல் இருக்கும் லஞ்சம் இருக்கும், அவர் வந்தாலும் கொலை இருக்கும் கொள்ளை இருக்கும். மாறுதல் ஒன்றுதான் நமக்கு ஆறுதல். அதற்குத் தான் இந்த தேர்தல் வருகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கல்வி இல்லை, தண்ணீர் இல்லை, வேலையில்லை

படிக்கக் கல்வி இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, பார்க்க வேலை இல்லை, மருத்துவம் இல்லை, பயணிக்கப் பாதை இல்லை.

உண்பதற்கு நஞ்சில்லாத உணவு இல்லை, சுவாசிக்கக் காற்று இல்லை.இது என்ன வாழ்க்கை. கூட்டணிக்கு வந்தால் பல்லாயிரம் கோடி தருகிறேன் என்கிறார்கள். கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் தருகிறேன் என்கிறார்கள்.

லஞ்சத்தை எப்படி ஒழிப்பது?

அப்ப ஏன் அங்க போகவில்லை.நல்லது செய்ய வேண்டும் என்றால் இவர்களோடு சேர்ந்து எந்த நல்லதைச் செய்ய முடியும்?

இவர்களையெல்லாம் ஒழிக்காமல் ஊழல் லஞ்சத்தை எப்படி ஒழிப்பீர்கள்.எல்லா மாநிலத்திலும் கள் இருக்கிறது என் மாநிலத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிப்பது ஏன்?” என்று சீமான் பிரசாரம் செய்தார்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in