

தமிழக சட்டமன்ற தேர்தல்
அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தமிழகத்தில்வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ளது.
அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
14.59 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர், 83,875 காவல் துறையினர், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்குச்சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே தலா ஒரு கண்காணிப்பு கேமரா என மொத்தம் 1.50 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களை உற்சாகமாக வரவேற்று, மகிழ்ச்சியுடன் வாக்களிக்க வைத்தனர்.
காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வெயிலை தவிர்க்கும் விதமாக, காலை 7 மணிக்கே முதியோர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளை செலுத்தினர். சக்கர நாற்காலி மூலம் முதியோர், மாற்றுத் திறனாளிகளை அழைத்துவர தன்னார்வலர்கள் உதவினர்.
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுமண தம்பதிகள்
முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
காலை 9 மணிக்குள்ளாக 17.69 சதவீத வாக்குகளும், பிற்பகல் ஒரு மணிக்குள் 56.81 சதவீத வாக்குகளும் பதிவாகின. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்களித்தனர். இதனால், தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்தது.
மின்னணு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நீடித்தது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
பின்னர், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் 63 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எஸ்ஐஆர் பணி - அதிகரித்த வாக்கு சதவீதம்
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது.
இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
கரூரில் வாக்கு சதவீதம் அதிகம்
எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.
=====