மேகேதாட்டு அணை விவகாரம் : மத்திய அரசின் பதிலுக்கு இபிஸ் கண்டனம் : தமிழக மக்கள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தல்..!

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது
Mekedatu Dam Issue: EPS Condemns Central Government's Response
Mekedatu Dam Issue: EPS Condemns Central Government's Responsegoogle
2 min read

மேகேதாட்டு அணை விவாகரம், மத்திய அரசின் பதிலுக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகேதாடுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதிலிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனங்களை தெரிவித்துள்ளார்

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து மத்திய அரசு தெரிவித்திருந்தாவது

மேகேதாட்டுவில் கர்நாடகா புதிய அணை கட்டும் முயற்சியை மேற்கொள்வதற்கு, தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ‘‘காவிரி நதியின் குறுக்கே கட்டுமானத்தை மேற்கொள்ள கர்நாடகா அரசு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.

காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், மாநில எல்லைகளுக்குள் நீரைப் பயன்படுத்தவும், அதன் பயனை அனுபவிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேகதாது அணை தொடர்பாக, கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திட்ட அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும்” அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உயிர்நாடி காவிரி

காவிரி நதிநீர் தமிழ் நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.

பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எனது தலைமையிலான அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

குறுவை சாகுபடி பாதிப்பு , வேதனையில் டெல்டா விவசாயிகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்

* பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், (ப.எண்.342)

ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது' எனத் தெரிவித்துள்ளது.

* மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை எனது தலைமையிலான அம்மாவின் அரசு 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில், பிரதமர் அவர்களுக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தினேன். மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது

2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

என மேகேதாடு அணை விவகாரத்தில் மத்திய நீநீர் வளத்துறையின் பதிலுக்கு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in