மழையில்லாப் பேரழிவு.. ராட்சச வெள்ளம்! 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிலை? நேபாளம் - திபெத் எல்லையில் நடந்தது என்ன..?

நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் அடைமழையின்றி பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட ராட்சச வெள்ளத்தில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
A disaster without rain... a massive flood! What happened at the Nepal-Tibet border?
A disaster without rain... a massive flood! What happened at the Nepal-Tibet border?source:ai
2 min read

மழையில்லாமல் பாய்ந்து வந்த 30 அடி உயரப் பேரலை

நிலநடுக்கமோ அல்லது அடைமழையோ இல்லாத ஒரு சூழலில், திடீரென அடுத்த அரை மணி நேரத்திற்குள் 30 அடி உயரத்திற்கு ஆற்று நீர் மலையைப் போல எழும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு கற்பனை செய்ய முடியாத பயங்கரமான பேரழிவுதான் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நடந்திருக்கிறது.

மழை பெய்யாமலேயே எல்லைக் கிராமங்களை ஒட்டுமொத்தமாக பெருவெள்ளம் அடித்துச் சென்றதில் 200-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 800-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

பேரழிவில் இந்தியர்களின் நிலை?

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 பேரும் வெள்ளத்தில் சிக்கித் தொடர்பில்லாமல் உள்ளனர்.

பேரிரச்சலுடன் இரங்கி வந்த பெருஞ்சேறு

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8:40 முதல் 9:00 மணி வாக்கில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நேபாளத்தையும் திபெத்தையும் இணைக்கும் எல்லைப் பகுதியில் பாயும் 'போதேகோஷி' ஆற்றுடன், திபெத் எல்லையிலுள்ள 'லெண்டே கோலா' என்ற துணை ஆறு இணைகிறது.

காலை 9 மணிக்கு மக்கள் இயல்பாகப் பணியாற்றியபோது, திடீரென ஆற்று நீர் கலங்கத் தொடங்கி, அடுத்த 15 முதல் 30 நிமிடங்களில் பேரிரச்சலுடன் ராட்சச வெள்ளம் பாய்ந்தது.

'Miteri Friendship Bridge'

நீரோடு சேர்ந்து டன் கணக்கில் கற்பாறைகளும், மரங்களும், களிமண்ணும் பெருஞ்சேறாக இறங்கி சாப்ருபேசி, திமுரே ஆகிய இரு கிராமங்களையும் அடித்துச் சென்றன. மேலும், நேபாளம் - சீனாவை இணைத்த 'Miteri Friendship Bridge' பாலமும் தகர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

இயற்கைச் சீற்றத்திற்கான உண்மையான காரணம்

மழையே பெய்யாமல் இந்த வெள்ளம் எப்படி வந்தது என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருந்தது. துவக்கத்தில் நிலநடுக்கக் கருவிகளில் 4.4 முதல் 5.2 அளவுக்கு அதிர்வு பதிவானதால், நிலநடுக்கமே இதற்குக் காரணம் எனக் கருதப்பட்டது.

ஆய்வாளர்கள் கூறிய உண்மை

ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் அறிவியல் ஆய்வாளர்களும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து உண்மையான காரணத்தைக் கண்டறிந்தனர்.

இமயமலையின் உச்சியில் இருந்த பிரம்மாண்ட பனிப்பாறையும் பாறைப் பகுதியும் பெயர்ந்து, லெண்டே கோலா ஆற்றுப் பள்ளத்தாக்கில் விழுந்து ஆற்றின் ஓட்டத்தை முழுமையாக அடைத்துள்ளது.

இதனால் அடைபட்ட நீரின் அழுத்தம் தாங்காமல் அந்தத் தற்காலிக அடைப்பு திடீரென உடைந்ததால், அணை உடைந்ததைப் போல நீர் ஒரே அடியாகக் கீழ்நோக்கிப் பாய்ந்து இந்த கோரத் தாண்டவத்தை ஏற்படுத்தியுள்ளது.

பனிப்பாறை சரியும் போது ஏற்பட்ட அதிர்வுகளே நிலநடுக்கம் போன்று பதிவாகியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் நிலை

ஜூன் முதல் செப்டம்பர் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் முக்கியப் பாதையாக இந்த ராசுவா மாவட்டம் விளங்குவதால், சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட தகவல்களின்படி 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பில்லாமல் இருப்பதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

கும்பகோணம், சென்னை மற்றும் ஈஷா மையத்திலிருந்து சென்றவர்களில், சென்னையில் உள்ள தனியார் டிராவல்ஸ் மூலம் சென்றவர்கள் போதேகோஷி ஆற்றங்கரையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது வெள்ளத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் இருந்து சென்ற 103 பேரில் கும்பகோணத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

எஞ்சிய சென்னை யாத்ரீகர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்டு வர ஐஏஎஸ் குழு நேபாளத்திற்கும், 4 அமைச்சர்கள் டெல்லிக்கும் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ் கவலை

இதனிடையே, திபெத்தின் க்யிரோங் பகுதியில் தங்கியிருந்த ஈஷா மையத்தின் 77 பேர் இருந்த கட்டிடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ் கவலை தெரிவித்துள்ளார்.

முடங்கிய மின் உற்பத்தி மற்றும் தீவிர மீட்புப் பணிகள்

வெள்ளப் பெருக்கினால் 30-க்கும் மேற்பட்ட சாலைப் பாலங்களும் தொங்கும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டு தரைவழித் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகையில் இருந்த 6 பெரிய நீர்மின் திட்டங்கள் மூழ்கியதால் 430 மெகாவாட் மின் உற்பத்தி முடங்கியுள்ளது.

தரைவழிப் பாதை இல்லாததால், நேபாள ராணுவத்தின் 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் மூலமாக மட்டுமே மீட்புப் பணிகளும் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

வெள்ள அபாய எச்சரிக்கை

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்து நேபாள ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. திரிசூலி ஆறு இந்தியாவுக்குள் கண்டக் ஆறாகப் பாய்வதால் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இரங்கள் மற்றும் நிவாரண உதவி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததோடு, 2 விமானங்களில் 35 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். முதற்கட்ட நிவாரணமாக உலக வங்கியும் ரூ. 2,500 கோடியை வழங்கியுள்ளது.

இமயமலைப் பகுதியில் புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகளின் நிலைத்தன்மை குறைந்து வருவது இத்தகைய பேரழிவுகளுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in