

வெற்றி பெற்ற பிஎன்பி கட்சி
Tarique Rahman’s swearing-in ceremony of New Bangladesh PM : பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் (பிப்ரவரி 17-ம் தேதி) வங்கதேச பிரதமராக பதவியேற்றார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
பிஎன்பி கட்சி அமோக வெற்றி
300 இடங்களைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பு
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. வெற்றியை தொடர்ந்து, வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்கவிருந்த நிலையில், பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, வங்கதேசம் அழைப்பு விடுத்தது.
எனினும், மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேச வேண்டிய இருந்ததால், பிரதமர் மோடிக்கு பதிலாக சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டார்.
நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சி
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியிழப்புக்குப் பிறகு இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள், சீனா, மலேசியா போன்ற பிற நட்பு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்
இந்நிலையில், குறிப்பிட்டப்படி புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச அதிபர் முகமது சாஹாபுதின் முன்னணியில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\
வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையின் பதவியேற்பு விழா திறந்த வெளியில் நடந்தது.
16 மாதங்கள் கழித்து ஜனநாயக அரசு
நடைபெற்று முடிந்த தேர்தலில், பி.என்.பி கூட்டணி 212 இடங்களில் வென்றது. ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 77 இடங்களில் வென்றது. வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் 16 மாதங்கள் கழித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பது குறிப்பிடத்தக்கது.
முகமது யூனுஸ் திங்கட்கிழமை இரவு அன்று வழங்கிய பிரிவு உபசார பேச்சில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பட்டத்தக்கது. புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.