

உடைந்த பனிப்பாறை ஏரி
Bhutan Glacial Lake Burst Triggers Flood Alert in Assam, Bengal இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள அண்டை நாடு பூடான். இங்கு பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து பெருமளவு வெள்ளம் வெளியேறி உள்ளது.
மேற்கு வங்கம், அசாமிற்கு அபாயம்
இதனால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் அச்சத்தை ஏற்பட்டு இருக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோ சூ ஆற்றில் வெள்ளப் பெருக்கு
பூடானின் வடமேற்கு பகுதியில் உள்ள காசா (Gasa) மாவட்டத்தில், ஷிண்டாபு (Shintaphu) என்ற பனிப்பாறை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏரியில் தேங்கியிருந்த நீர், பாறைகள் மற்றும் மண் உள்ளிட்ட கழிவுகளுடன் பெருக்கெடுத்து மோ சூ என்ற ஆற்றில் பாய்ந்தது.
கரையோரங்கள் அடித்து செல்லப்பட்டன
இதன் காரணமாக, ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள, புகழ்பெற்ற காசா த்சாச்சு (Gasa Tshachu) இயற்கை வெந்நீர் ஊற்று வளாகம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகங்களும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
புனாகா-காசா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் மண் மற்றும் பாறைகள் அடித்து வரப்பட்டு குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
இந்தியாவை நோக்கி பாயும் வெள்ளம்
பனி ஏரியில் இருந்து வெளியேறிய 74 லட்சம் கன மீட்டர் நீர் பூடானில் இருந்து இந்தியாவை நோக்கிப் பாய்வதால், எல்லையோர மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் அசாமுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்
மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் மற்றும் கூச் பெஹார் (Cooch Behar) மாவட்டங்களிலும், அசாமின் துப்ரி மாவட்டத்திலும் வெள்ள அபாயம் ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் (CWC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கோஷ் (Sankosh) ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என்பதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் NDRF
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அசாம் அரசும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
=================