

இந்தியா தலைமையில் நடைபெறும் 18வது BRICS உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
உலகின் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை ஒன்றிணைக்கும் இந்த மாநாட்டில் 11 உறுப்புநாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர்.
இந்த மாநாட்டில் இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகை பார்க்கப்படுகிறது.
2019-ல் மாமல்லபுரம் வந்த பிறகு, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வந்துள்ளார்.
2023-ல் நடைபெற்ற G20 மாநாட்டில் கூட ஜி ஜின்பிங் பங்கேற்காத நிலையில், அவரது இந்த வருகை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலக பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு, உள்ளூர் நாணய பரிவர்த்தனை, எரிசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, சர்வதேச நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து BRICS தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
BRICS அமைப்பு தற்போது உலக மக்கள்தொகையில் சுமார் 49 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீத பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இதனால் இந்த மாநாடு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் ஓரமாக பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடனான சந்திப்புகள் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளன.
================