

பனிமலைகளில் உடைப்பு
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகளில் ஏற்பட்ட உடைப்பு பேரழிவை ஏற்படுத்தியது. இதனால், க கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கரைபுரண்ட வெள்ளம்
மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் சென்று, வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியது.
வெள்ளத்தின் கோர தாண்டவம்
ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் நொடிப் பொழுதில் வெள்ளத்தில் சரிந்து விழுந்தன. பெரும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வாகனங்கள், பொதுமக்கள் என வழியில் இருந்த அனைத்தையும், இழுத்து சென்றது வெள்ளம்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
175 பேர் பலி, 750 பேர் மாயம்
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 175 பேர் உயிரிழந்ததாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. மேலும் காணாமல் போன 750-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் 9 பாதுகாப்புப் படையினர் மற்றும் 60 நீர்மின் நிலைய தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேபாள சுற்றுலா வாரியத்தின்படி,133 இந்தியர்கள் உட்பட750 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மின் விநியோகம் முடக்கம்
ராசுவாகதி, சிலிமே, திரிசூலி நீர்மின் நிலையங்கள் உட்பட 6 முக்கிய மின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற நிலையங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததால் நேபாளத்தில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் உடைந்ததால், ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகவே பெருவெள்ளம் ஏற்பட்டதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்தார்.
தேடும் பணி தீவிரம்
காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.
பிரதமர் மோடி உறுதி
நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
அத்துடன், தேவையான அனைத்து மனிதாபிமான மற்றும் மீட்பு உதவிகளையும் இந்தியா வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
தயார் நிலையில் நிவாரண பொருட்கள்
நேபாளத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட இந்திய விமானப் படையின் சி-17 மற்றும் சி-130 விமானங்கள் நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
உதவி எண்கள் அறிவிப்பு
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. தொலைபேசி / வாட்ஸ்அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள், உதவிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் சென்ற தமிழர்கள்
இதற்கிடையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்குச் சென்றனர்.
அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களைக் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் அழைத்துச் சென்றுள்ளது.
தமிழர்கள் பத்திரமாக மீட்பு
இவர்கள் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதில் ஒரு வாகனத்தில் சென்ற 20 பேர் தப்பி பத்திரமாக உள்ளதாகவும், மற்ற 2 வாகனங்களில் சென்ற 37 பேர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, பின்னர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
==========