

வங்கதேச தலைவர் கலிதா ஜியா
Former Prime Minister of Bangladesh Khaleda Zia Passed Away At Age 80 : இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம். இதன் பிரதமராக இருந்த ZIAUR ரஹ்மான் 1981ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதையடுத்து வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராக அவரது மனைவி கலிதா ஜியா பொறுப்பேற்றார்.
3 முறை பிரதமராக கலிதா ஜியா
பின்னர் 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கலிதா ஜியா, அந்நாட்டின் பிரதமரானார். 1996ம் ஆண்டும் வெற்றி பெற்று 2வது முறை பிரதமர் பதவியை அவர் அலங்கரித்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வாகை சூடிய கலிதா ஜியா, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார்.
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனாசிர் புட்டோவிற்கு பிறகு, ஒருநாட்டை ஆண்ட இஸ்லாமிய பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் கலிதா ஜியா.
இந்தியாவில் பிறந்தவர் கலிதா ஜியா
1945ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் பிறந்தவர் கலிதா. இந்திய பிரிவினையின் போது இவரது குடும்பத்தினர் வங்கதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர். 15வயதில் ராணுவ வீரரான ஜியாவுர் ரஹ்மானை மணமுடித்தார் கலிதா.
1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வங்கதேசம் வெற்றி பெற, அந்நாட்டின் தளபதியாக, பின்னர் பிரதமராக பொறுப்பேற்றார் ஜியாவுர் ரஹ்மான்.
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஷேக் ஹசினாவின் ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் கலிதா ஜியா. 6 ஆண்டுகள் சிறையில் கழித்த அவருக்கு, நீரிழிவு, நுரையீரல், இதயம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இடைக்கால அரசால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கலிதா ஜியா, இன்று காலை காலமானார் அவருக்கு வயது 80.
இந்தியாவுடன் நெருங்கிய நட்பு
மூன்று முறை பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்தியவர் கலிதா ஜியா. இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவுகள் இவரது ஆட்சிக் காலத்தில் வலுப்பெற்று, மக்களிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தி தந்தன.
பிரதமர் மோடி இரங்கல்
கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இந்தியா - வங்கதேச நல்லுறவில் அவர் செயல்பாடுகள் எப்போதும் நினைவு கூரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கலிதா ஜியாவின் தொலைநோக்கு பார்வை, நமது கூட்டாண்மையை தொடர்ந்து வழி நடத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான்
கலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பி இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இவரது தலைமையின் கீழ் வங்கதேச தேசியவாத காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமராக பிரகாசமான வாய்ப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருப்பதால், தேர்தலில் தாரிக் ரஹ்மானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
========================